Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM
தமிழகத்தில் அதிமுக உறுதியாக வெற்றிபெறும் என நம்பப்பட்ட தொகுதிகளில் திருப்பூர் மக்களவைத் தொகுதியும் ஒன்று. ஆனால் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அக்கட்சி தோற்றிருப்பது, கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டி யிட்டார். அவரை எதிர்த்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.சுப்பராயன் போட்டியிட்டு, 93368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 5 லட்சத்து 8725. எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4 லட்சத்து 15357 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பெருந்துறை, கோபி, அந்தியூர் மற்றும் பவானி ஆகிய 6 தொகுதிகளிலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக அளப்பரிய வெற்றியை பெற்றது. அதனால் இந்த 6 தொகுதிகளிலும் செய்த மக்கள் நலத்திட்டங்கள் அதிமுகவுக்கு வாக்குகளாக மாறும் என மிகவும் நம்பிக்கையோடு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டார் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.
திருப்பூர் தெற்கு தொகுதியின் முதல் சுற்றிலேயே ஆனந்தனை காட்டிலும் சுப்பராயன் 1468 வாக்குகள் முன்னிலை பெற்றார். ஒன்பதாம் சுற்று வரை மெல்ல மெல்ல முன்னேறிய சுப்பராயன், 10-ம்சுற்றில் 13274 வாக்குகள் முன்னிலை பெற்றார். 16-ம் சுற்றில் 25154 வாக்குகளைக் கடந்தது. தெற்கு தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இம்முறை பாஜகவோடு அதிமுக கூட்டு சேர்ந்ததால், வாக்குகள் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு என்கின்றனர் அக்கட்சியினர்.
அதிகபட்சமாக திருப்பூர் தெற்கு தொகுதியில் 25944 வாக்குகளும், குறைந்தபட்சமாக பெருந்துறை தொகுதியில் 4652 வாக்குகளும் வித்தியாசமாக அமைந்தன.
இதேபோல் பவானி, பெருந்துறை, கோபி ஆகிய பகுதிகளிலும் ஆரம்ப சுற்று முதலே இந்திய கம்யூனிஸ்ட் வாக்குகளை அள்ளியது.
களத்தில் இருந்த மற்ற வேட்பாளர்களான வி.எஸ்.சந்திரகு மார் (மக்கள் நீதி மய்யம்) - 64,657. எஸ்.ஆர்.செல்வம் (அமமுக) – 43,816. பி.ஜெகநாதன் (நாம் தமிழர் கட்சி) - 42,189 ஆகியோருடன் நோட்டாவுக்கு 21861 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகி கூறியதாவது: தமிழகத்தில் மோடி எதிர்ப்பு இருப்பதை, இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. அதிமுகவுக்கு எதிர்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு ஆகிய பிரச்சினைகள் தமிழ்நாட்டுக்கு இருந்தன. தொழில்துறையினருக்கு ஜி.எஸ்.டியும், பணமதிப்பு நீக்கமும் முக்கியப் பிரச்சினையாக உள்ளன. இன்றைக்கு ஜிஎஸ்டியில் ரீபண்ட் தாமதம் ஆகிறது. இவையெல்லாம் தொழில் துறையில் இருப்பவர்களை நசுக்கி வருகிறது. இதுபோன்றவைதான், மிகுந்த நம்பிக்கையோடு அதிமுக வெற்றிபெறும் என நினைத்திருந்த திருப்பூர் மக்களவைத் தொகுதி பறிபோக காரணம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT