Last Updated : 21 May, 2019 12:00 AM

 

Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM

கலை, அறிவியல் கல்லூரிகளில் குவிந்த விண்ணப்பங்கள்: கூடுதல் ‘சீட்’ கேட்டு காமராசர் பல்கலை.க்கு கடிதம்

மதுரையிலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்ததால் கூடுதல் சேர்க்கைஅனுமதி கேட்டு, பல்கலை.க்கு கல்லூரி நிர்வாகங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.

காமராசர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 11 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 27 தன்னாட்சி கல்லூரிகள், 6 பல்கலை. உறுப்புக் கல்லூரிகள், 50 சுயநிதி கல்லூரிகள் உட்பட 115 கல்லூரிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் ஆய்வகம் இல்லாத பாடப் பிரிவான பிகாம், கலைப் பிரிவில் ஒரு வகுப்பில் 60 பேரும், ஆய்வகத்துடன் கூடிய பாடப்பிரிவுகளில் 40 மாணவர் களும் சேர்க்கப்படுகின்றனர். வகுப்பறை கட்டிட வசதி, உள்கட்டமைப்பை பொருத்து பல்கலை. அனுமதித்தால் கூடுதல் மாணவர் களைச் சேர்க்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் படிப்புகளுக்கான மவுசு குறைந்ததால் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு குறிப்பாக பிகாம், பிகாம்-சிஏ, பிஏ ஆங்கிலம், தமிழ் இலக்கியம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி வேதியியல் போன்ற பாடங்களுக்கு அதிக அளவில் விண்ணப்பப் படிவங்கள் வந்துள்ளன என கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட இடம் கிடைக்காமல் சிரமப்படு கின்றனர்.

இதையடுத்து, பல்வேறு கல்லூரிகளின் நிர்வாகங்கள் சார்பில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி காமராசர் பல்கலை.க்கு கடிதம் அனுப்பி உள்ளன. இதுகுறித்து வக்போர்டு கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் கூறியதாவது: கலை, அறிவியல் கல்லூரி களில் சேர மாணவர்கள்ஆர்வம் காட்டுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றவர்களைக்கூட கலை, அறிவியல் பிரிவுகளில் சேர்க்க முடியவில்லை. எங்களது கல்லூரியிலும் பிகாம் உட்பட சில பாடப்பிரிவுக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தகுதியானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் ஆய்வகமற்ற பாடப் பிரிவுகளுக்கு 25 சதவீதமும், ஆய்வக பாடப்பிரிவுக்கு 20 சதவீதமும் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி பல்கலை.க்கு கடிதம் அனுப்பி உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x