Published : 10 May 2019 01:45 PM
Last Updated : 10 May 2019 01:45 PM
மதுரை அருகே அரசு பஸ்சில் சென்றவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறி ரூ.20 லட்சம் பறித்த போலி நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு, தனியார் ‘சிட் பண்ட்’ நிதி நிறுவனம் ஒன்று புதிதாக தொடங்கப்பட்டது. இங்கு சிவகங்கையைச் சேர்ந்த சரணவன்(24), அரவிந்த்குமார் (27) ஆகியோர் பண வசூல் பிரிவில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக நிதி நிறுவனத்தில் வசூலான ரூ.20 லட்சம் பணத்தை மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள வங்கியில் செலுத்த நிதி நிறுவன மேலாளர் சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து சரவணன், அரவிந்த்குமார் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) சூட்கேசில் பணத்தை எடுத்துக்கொண்டு அரசு பேருந்து மூலம் மதுரை பயணித்துள்ளனர்.
அவர்கள் சென்ற பேருந்து வரிச்சியூரை தாண்டியபோது, திடீரென அந்த பேருந்தை இருவர் வழிமறித்தனர்.
பேருந்து நின்றதும், அதில் ஏறிய இருவரும், தங்களை தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறினர். குறிப்பிட்ட நிதிநிறுவனம் பற்றி கூறி, சரவணன், அரவிந்தகுமாரை கீழே இறக்கினர்.
தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்த பொலீரோ காரில் அவர்களை ஏற்றிச் சென்றனர். வரிச்சூர் அருகிலுள்ள சக்குடி விலக்கு பகுதியில் காரை நிறுத்தி ஊழியர்களிடம் இருந்த ரூ. 20 லட்சம், 3 செல்போன்களை அவர்கள் பறித்துள்ளனர்.
"நீங்கள் கொண்டு சென்ற ரூ 20 லட்சத்துக்கு உரிய ஆவணங்களை காட்டி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்" எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்
சந்தேகம் அடைந்த நிதிநிறுவன ஊழியர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத் துக்கு சென்றனர். அங்கு விசாரித்தபோது, தேர்தல் பறக்கும் படையினர் என்ற பெயரில் போலி நபர்கள் ரூ.20 ஆயிரம் பணத்தைப் பறித்தது தெரியவந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் பற்றி சரவணன் மதுரை கருப்பாயூரணி போலீசில் புகார் அளித்தார்.
விசாரணையில், சிவகங்கையில் இருந்து இரு ஊழியர்களும் மதுரைக்கு பணம் எடுத்துச் செல்வது, அவர்கள் செல்லும் பேருந்து உள்ளிட்ட தகவலை யாரோ தெளிவாகக் கூறி இருப்பது தெரியவந்தது.
எனவே, சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்களில் யாரேனும் சொல்லி இருக்கலாம் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக டிஎஸ்பி நல்லு தலைமையில் 2 தனிப்படையை அமைத்து எஸ்பி. மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தனிப்படையினர் நிதிநிறுவனம் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பணத்தை பறி கொடுத்த ஊழியர்களின் செல்போன்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
தேர்தல் காலம் என்பதால் பறக்கும் படையினர் பெயரை சொல்லி ரூ.20 கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT