Published : 22 May 2019 08:45 AM
Last Updated : 22 May 2019 08:45 AM

108 ஆம்புலன்ஸுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுமா?

திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் சில நாட்களுக்கு முன் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்ற முதியவர் மீது மினி பஸ் மோதியது. தொழுகைக்குச் சென்ற முஸ்லிம்கள், காயமடைந்த முதியவரை மீட்டு, விசிறிவிடுகிறார்கள்.

முதியவர் அடிபட்டதும் 108 இலவச ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்படுகிறது. ஆனால்,  அரைமணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும், பயனில்லை. 108 ஆம்புலன்ஸ்ஸை தொடர்புகொண்டால், தனியார் ஆம்புலன்ஸ்கள் வந்து, விபத்தில் சிக்கியவர்களையும், நோயாளிகளையும் அழைத்துச் சென்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ப்பது வாடிக்கையாகி வருகிறது என்று குற்றம் சுமத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உயிர் காக்கும் உன்னத சேவையான 108 ஆம்புலன்ஸ் வருவதில் சிரமம் என்ன? பின்னணி என்ன? திருப்பூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்களிடம் பேசினோம்.

“எங்களுக்கு அழைப்பு வரும். அந்த நேரத்தில் வேறெங்கும் நாங்கள் சென்றிருந்தால்,  வேறொரு வாகனம் செல்லும் முன்பு,  தனியார் ஆம்புலன்ஸுக்கு தகவல்  செல்வது தொடர்கதையாகிறது. 2014-ல் பல்லடம் அருகே அஜித்குமார் என்ற 17 வயது இளைஞர்  இருசக்கர வாகனத்தில் சென்று, விபத்துக்குள்ளானார். தலையில் காயம்பட்ட நிலையில் அவரை மீட்கச் சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இது பெரும் பிரச்சினையானது.

பாதிக்கப்பட்டவர்கள், “நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தினோம். ஆனால், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் தன்னிச்சையாக,  தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். தனியார் மருத்துவமனைகள் இதற்காக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்” என்றெல்லாம் புகார்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக,  தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது. பொதுவாக விபத்து நேரிட்டால், 108 ஆம்புலன்ஸ் செல்வதற்கு முன்,  தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள்  செல்வதற்கு, சில  தனியார் மருத்துவமனைகளின் பேராசையே முக்கியக் காரணம்” என்றனர் வேதனையுடன்.

தனியார் நிறுவனம் பராமரிப்பு?

தமிழகத்தில் 2008-ல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், திருப்பூர்மாவட்டத்தில் திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது  24 வாகனங்கள் உள்ளன. திருப்பூர் நகரில் பழைய பேருந்து நிலையம், குமார் நகர், மங்கலம், பெருமாநல்லூர், அவிநாசி அரசு மருத்துவமனை, ஊத்துக்குளி, புறநகர்

பகுதியில் பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், மூலனூர், குண்டடம், தாராபுரம், ஜல்லிபட்டி, உடுமலைப்பேட்டை,  மடத்துக்குளம்  பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள்  உள்ளன.

தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் 4,600 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 1,500 பேர் பெண்கள். ஓட்டுநர்கள் மற்றும் எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன்ஸ் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் உரிய ஊதியம் இல்லை. சட்டப்படியாக 8 மணி நேரம் வேலை இல்லை. இதனால், ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்று அவ்வப்போது புகார்கள் எழும்.

இந்த  ஆம்புலன்ஸ்களை தனியார் நிறுவனம்தான் பராமரிக்கிறது. “ஆம்புலன்ஸ்களை சுத்தம் செய்ய உரிய இடம் இல்லை. ரயில் மோதி இறந்தவர், சாலை விபத்தில் சிக்கியவர் என பலரையும் ஏற்றுகிறோம். வாகனத்தில்  நோயாளிகளின் ரத்தம், இயற்கை உபாதை உட்பட பல விஷயங்கள் தேங்குவதால், கிருமித்தொற்று இருந்துகொண்டே இருக்கும். சுகாதாரம் என்பதே கேள்விக்குறிதான். அதே வாகனத்தில்தான் நிறைமாத கர்ப்பிணியையும் ஏற்றி வருகிறோம். சிலருக்கு வாகனத்தில்தான் குழந்தை பிறக்கிறது. கர்ப்பிணியின் குழந்தைப் பேறு அறை மிகுந்த கவனத்துடன் சுத்தம் செய்யப்படும். ஆனால், சுகாதாரமே இல்லாத 108 ஆம்புலன்ஸில் குழந்தை பிறப்பது மிகப் பெரிய துயரம்” என்று புலம்புகின்றனர் ஊழியர்கள் சிலர்.

அதேபோல, “வாகனத்தை சுத்தம்  செய்ய போதிய தண்ணீர் மற்றும் கிருமிநாசினி கிடையாது. பெட்ரோல் பங்க், வட்டாட்சியர் அலுவலகங்களில்தான் வாகனத்தை நிறுத்திவைக்க வேண்டியுள்ளது. இரவு நேரத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்குவதற்குக்கூட  உரிய இட வசதி இல்லை. இயற்கை உபாதை செல்வதற்குக்கூட வழியில்லை. உணவு உண்ணக்கூட கால அவகாசம் இல்லாத சூழலில்தான் பணிபுரிந்து வருகிறோம். வாகனப்  பராமரிப்பு சுத்தமாக இல்லை.

குறிப்பிட்ட நேரத்துக்குள் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றால், நோயாளியின் நிலையைப் பொறுத்து, அவசரமாகத்தான் செல்ல வேண்டும். கிலோமீட்டர் கணக்கிட்டு வாகனத்தை ஓட்டுவது இயலாத காரியம் ஆகும். சில வாகனங்களில் சைரன்கூட வேலை செய்வதில்லை. இந்த அளவுக்கு பராமரிப்பு மோசமான நிலையில் உள்ளது. கடந்த வாரம் கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சியில் ஓர் ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றியது.  திருத்தணியில் வாகனத்தில் இருந்த யுபிஎஸ் தீப்பிடித்தது. ஆம்புலன்ஸ்களின் மோசமான பராமரிப்புக்கு இவையே உதாரணம். மருத்துவச் சேவையில் தமிழகம்

முன்னோடி மாநிலம் என்று சுகாதாரத் துறை பெருமிதம் கொள்கிறது. அதேசமயம்,  உயிர் காக்கும் இந்த உன்னத சேவையை நல்லபடியாக நடத்தினால்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்” என்கின்றனர்  பல ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்கள்.

தினமும் 3,500 சேவை; முறையான பராமரிப்பு!

108 ஆம்புலன்ஸ்களை பராமரிக்கும் ஜிவிகே- இஎம்ஆர்ஐ நிறுவன மாநில செயல் தலைவர் செல்வகுமார் கூறும்போது, “108 ஆம்புலன்ஸ்கள் 70 சதவீதம் அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில்தான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எஞ்சியவைதான் பெட்ரோல் பங்க், சுங்கச்சாவடிகளில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு 108 ஆம்புலன்ஸ் சேவையையும் நாங்கள் உன்னிப்பாக கவனிக்கிறோம். 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு வரும் சூழலில், குறிப்பிட்ட நோயாளிகளை தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் எடுத்துச் செல்வது குறித்து விசாரிக்கிறோம். நோயாளியின் விருப்பத்துக்கேற்பவே தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு செல்கிறோம். இதற்கான படிவத்திலும் கையெழுத்து பெறுகிறோம்.

தமிழகத்தில் தினமும் 3,500 சேவைகளில் ஈடுபடுகிறோம்.  தனியார் மருத்துவமனைக்கு  நோயாளியை அழைத்துச் சென்றவர்கள், மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியவர்கள்  பலரை வேலையில் இருந்தே நீக்கியுள்ளோம். வாகனங்களில் சுகாதாரத்தைப் பேணுகிறோம். வாகனங்களைக் கழுவ பிரத்யேக இடம் தேவை. தொடர்ச்சியாக சேவை செய்ய வேண்டியுள்ளதால், இது சாத்தியமாகவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x