Published : 14 May 2019 07:11 PM
Last Updated : 14 May 2019 07:11 PM
சந்திரசேகர ராவைச் சந்தித்தது அரசியல் இல்லை என ஒருபுறம், சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு மறுபுறம், ராகுல் பிரதமர் வேட்பாளர் என அறிவித்துவிட்டு மூன்றாம் அணித் தலைவர்களுடன் உறவு என திமுகவுக்குள் நடக்கும் குழப்பமான நிகழ்வுகள் எதை நோக்கி நகர்கின்றன?
திமுகவுக்குள் என்னதான் நடக்கிறது என்கிற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுகிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தார் ஸ்டாலின். இடையில் மூன்றாவது அணித் தலைவர்களான மம்தா, மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்டோர் கூட்டிய மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொண்டுவராது என்கிற நிலை நோக்கியை நகர்வதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநிலக் கட்சிகளான திமுக, திரிணமூல் காங்கிரஸ், உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதிக் கட்சி, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம், தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி ஆகியவை தனியாக அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிற கருத்தும் வைக்கப்படுகிறது.
அதே நேரம் இடதுசாரிக் கட்சிகளும் தனியாக உள்ளன. இந்நிலையில் அனைவரும் மூன்றாவது அணிகளாக ஒன்றிணைந்து தனியாக ஆட்சி அமைப்பது அல்லது தனிப்பெரும் கட்சியான காங்கிரஸுடன் ஆட்சி அமைக்க முயற்சிப்பது என்கிற நிலை நோக்கி அகில இந்திய அரசியல் களம் நகரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதை பாஜக தவிர்க்க நடவடிக்கையில் இறங்கும் என்கிற கருத்தும் வைக்கப்படுகிறது.
இதில் திமுகவின் நிலை கேள்விக்குறியாகவும் நம்பகத் தன்மையற்றதாகவும் உள்ளதாக அமமக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர் தமிழிசை போன்றோர் விமர்சிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தேவைப்பட்டால் பாஜகவுடன் திமுக வரும். அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என தமிழிசை இன்று பேட்டி அளித்துள்ளார்.
வரும் 21-ம் தேதி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் கூட்டுவதாக இருந்தது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என உறுதியாக அறிவிப்பாரா? எனவும் தமிழிசை சவால் விட்டுள்ளார்.
மத்தியில் ஏற்படும் குழப்பமான அரசியல் நிகழ்வை திமுக பயன்படுத்தத் துடிக்கிறது. தமிழகத்தில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ள திமுக ஆட்சிக் கட்டிலில் மத்தியில் வலுவான துறைகளைக் கேட்க காங்கிரஸை நிர்பந்திக்க இதுபோன்ற சந்திப்புகளை நடத்துகிறது என ஒரு சாரர் கருத்து தெரிவிக்கின்றனர்.
மறுபுறம் மூன்றாவது அணியுடன் இணைந்து காங்கிரஸுடன் பேரம் பேசினால் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக ஸ்டாலின் உயரலாம் என நினைக்கிறார் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.
குழப்ப அரசியலை பாஜகவும் பயன்படுத்தத் துடிக்கும். அப்போது எதைப்பற்றியும் கவலைப்படாமல் திமுக, பாஜக பக்கம் தாவும் என அமைச்சர் ஜெயக்குமார் போன்றோரும், சில அரசியல் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதும், கழற்றி விடுவதும் திமுகவுக்குப் புதிதல்ல என கடந்த கால வரலாற்றைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரம் திமுகவுக்குள் இதற்கான மறுப்புக்குரலும் எழுகிறது. ''ஒருமுறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதன் பின்னர் இல்லை என முடிவெடுத்து, அதன் பின்னர் அந்தக் கருத்தில் திமுக ஒருபோதும் பின்வாங்கவில்லை. ராகுலை பிரதமர் வேட்பாளர் என முதன்முதலில் அறிவித்தவர் திமுக தலைவர் ஸ்டாலின்தான். இதுபோன்ற தகவல்கள் பரப்பி விடப்படுகின்றன'' என்கிறார் அமைச்சர் பொன்முடி.
பெரும்பாலான திமுக தலைவர்களின் கருத்து இதுவாக இருந்தாலும், சந்திரசேகர ராவைச் சந்திப்பதும் அதில் அரசியல் இல்லை என்பதும், மறுநாளே சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பதும் அதிலும் அரசியல் இல்லை என்பதும், பாஜகவுடன் கூட்டு எந்நாளும் இல்லை என அறிவிக்கத் தயாரா? என்ற டிடிவி தினகரனின் கேள்விக்கு இதுவரை உறுதியான பதில் வராததும் கவனிக்கத்தக்கது.
குழப்பம் திமுகவுக்குள் இல்லை என்று தலைவர்கள் கூறி வந்தாலும் சமீபத்திய நிகழ்வுகளை, திமுகவுக்குள் என்னதான் நடக்கிறது என்கிற குழப்ப மனநிலையில்தான் அனைவரும் பார்க்கின்றனர். இந்நிலையில் நான் பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்ததை நிரூபித்தால் தாம் அரசியலைவிட்டே விலகுவதாக ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
இதற்கு தான் சவாலை நிரூபிக்கத் தயார் என்று தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
காங்கிரஸுடன் கூட்டணி, சந்திரசேகர ராவுடன் சந்திப்பு, பாஜகவுடன் கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை என தமிழிசை பேட்டி என தேர்தல் முடிவு வரும் நேரத்தில் குழப்பமான செய்திகள் வெளியாகிறதே?
தெளிவாக எங்கள் தலைவரே அறிவித்து விட்டாரே காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும். ராகுல் பிரதமர் ஆவார் என்று சொல்லிவிட்டாரே. நேற்று சந்திரசேகர ராவ் வந்தபோதுகூட அவரிடமும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று சொல்லிவிட்டார். இதைவிடத் தெளிவாக வேறு என்ன சொல்ல முடியும்?
திமுக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தமிழிசையே கூறியுள்ளாரே?
தமிழிசை பேசுவது கற்பனாவாதம். அவங்க இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினால் அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? அவர் தினமும் ஏதாவது ஒன்று பேசுவார். டிவிமுன் மைக் கிடைத்தால் எதுவேண்டுமானாலும் பேசுவார்.
தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன், நாங்கள் பாஜகவுடன் எந்நாளும் கூட்டணி இல்லை அதுபோன்று திமுக உறுதியாகச் சொல்லமுடியுமா? என்று கேட்டார். ஆனால் திமுக தரப்பில் உறுதியாக பாஜக கூட்டணி இல்லை என்று பதில் வரவில்லையே?
அதைத்தான் நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோமே. ராகுல் தலைமையில் அமைய இருக்கின்ற ஆட்சியில் திமுக இடம்பெறும் என்று சொல்லிவிட்டோம். இதைவிட வேறு என்ன சொல்ல வெண்டும். நேற்றுகூட சந்திரசேகர ராவிடம் நீங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைத்தார். அதை ஏன் யாரும் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT