Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM
திருச்சி தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளாத நிலையிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர்.
மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியைப் பெற திமுக கூட்டணியில் கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடமிருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட நேரடி கோரிக்கையின் அடிப்படையில் திருச்சி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டார். தாமதமாகதொடங்கிய பிரச்சாரம் அதைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த திருநாவுக்கரசருக்கு, ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. எனவே திமுக,மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரை நம்பி களப்பணியைத் தொடங்கினார்.
ஆனாலும், நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், பிரச்சார பணிகளுக்கும் தேவையான அளவுக்கு பணம் கொடுப்பதில்லை என திருநாவுக்கரசர் மீது கூட்டணி கட்சியினர் குறை கூறினர். இச்சூழலில் இறுதிகட்ட பிரச்சாரத்தின்போது அமமுக வேட்பாளர் சாருபாலா முந்துவதாக கருத்துக்கணிப்பு வெளியாகின. ஆனாலும்கூட, திருநாவுக்கரசர் அதை கண்டுகொள்ளாமல் வழக்கம்போலவே செயல்பட்டார். இது கூட்டணி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
“42 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ள என்னால், மக்களை ஓரளவுக்காவது கணிக்க முடியும். இத்தொகுதி வாக்காளர்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அனைத்து இடங்களிலும் திமுகவினர் முழுமையாக ஒத்துழைக்கின்றனர். எதிர்த்து நிற்கும் கட்சிகளின் வேட்பாளர்களும் வலுவானவர்களாக இல்லை. எனவே, ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. குறைந்தபட்சம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” எனப் பதிலளித்துள்ளார். அவரது இந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT