Published : 13 May 2019 04:09 PM
Last Updated : 13 May 2019 04:09 PM

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: பிரதமர் மோடியிடம் நதிநீர் இணைப்பை வலியுறுத்துவோம்; பிரேமலதா

அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டது போன்று தற்போதைய தண்ணீர் பிரச்சினையும் தீர்க்கப்படும் என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று (திங்கள்கிழமை) மேற்கு சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக, விருகம்பாக்கத்தில் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், பழங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"ஒரு காலத்தில் மின்சாரமே இல்லாமல் நாம் தமிழ்நாட்டில் கஷ்டப்பட்டோம். இன்றைக்கு தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருக்கிறது. அதுபோல, இன்றைக்கு தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் எங்களது முதல் வேண்டுகோளாக நதிநீர் இணைப்பு குறித்து உறுதியாக வலியுறுத்துவோம். தண்ணீர் தேவையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

நாளை முதல் 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். இது தாமதம் கிடையாது. நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டதுதான். கிளைமேக்ஸில் மக்களிடம் சென்றால் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். இத்தனை நாட்கள் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரச்சாரம் செய்ததால் நாளையிலிருந்து நான் பிரச்சாரம் செய்கிறேன்"

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x