Last Updated : 06 May, 2019 12:00 AM

 

Published : 06 May 2019 12:00 AM
Last Updated : 06 May 2019 12:00 AM

சிவகங்கை அருகே 30 ஆண்டாக குடிநீர் பிரச்சினை: பொது கிணறை தூர்வார களம் இறங்கிய கிராம இளைஞர்கள்

சிவகங்கை அருகே காயங்குளம் கிராமத்தில் பலமுறை மனு கொடுத்தும் 30 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து களத்தில் இறங்கிய இளைஞர்கள் பொதுக்கிணற்றை தூர்வாரி வருகின்றனர்.

சிவகங்கை அருகே குருஞ்சாடி ஊராட்சி காயங்குளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கடந்த 30 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் இக்கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, 2 தண்ணீர் தொட்டிகள் காட்சிப் பொருளாக உள்ளன. இருக்கும் ஒரே அடி பம்ப்பில் பெரும்பாலான நேரம் தண்ணீர் வருவதில்லை. தினமும் 3 கி.மீ. நடந்து சென்று கண்மாய் நீரை எடுத்து கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தொடர் வறட்சி காரணமாக கண்மாயிலும் தண்ணீர் இல்லை. தற்போது மீதமிருக்கும் ஓரே நீராதாரமாக கண்மாய்க்குள் இருக்கும் கிணறு மட்டுமே உள்ளது. அதிலும் மிகக் குறைந்த அளவு நீரே கிடைக்கிறது. அந்த நீர் மொத்த கிராமத்துக்கும் போதுமானதாக இல்லை. பலர் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் எடுத்து வந்தனர்.

தொடர்ந்து குடிநீருக்காக சிரமப்பட்டு வரும் நிலையில், தங்கள் கிராமத்துக்குத் தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அமைச்சர், மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு 100 முறைக்கு மேல் மனுக்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஆழ்துளைக் கிணறு அமைத்தனர். அதிலும் தண்ணீர் வராததால் விரக்தி அடைந்தனர். இதையடுத்து ,கண்மாய்க்குள் இருந்த கிணwwற்றை ஆழப்படுத்தி தூர்வாரினாலாவது அதிக தண்ணீர் கிடைக்குமா என்ற எண்ணத்தில் கிராம இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தூர்வாரி வருகின்றனர்.

இதுகுறித்து காயங்குளத்தைச் சேர்ந்த முத்துராஜா கூறியதாவது: எங்கள் ஊரில் நிலத்தடி நீர் இல்லை. இதனால் அருகில் உள்ள நிலத்தடி நீர் அதிமாக உள்ள பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

கண்மாய்க்குள் இருக்கும் கிணறுதான் 30 ஆண்டுகளாக தண்ணீர் கொடுத்து வருகிறது. தற்போது அதிலும் தண்ணீர் குறைந்ததால் எங்கள் கிராம இளைஞர்கள் கிணற்றில் இறங்கி தூர்வாரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x