Published : 23 May 2019 07:16 PM
Last Updated : 23 May 2019 07:16 PM
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் வேலூர் தவிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தேனி தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல 'இதோ வருகிறேன், அதோ வருகிறேன்' என்று தாமதப்படுத்தாமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்த கையோடு கட்சியைத் தொடங்கியவர் கமல்ஹாசன்.
கட்சி தொடங்கிய ஓராண்டு காலத்திலேயே மக்களவைத் தேர்தலையும் சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் சந்தித்தார். நடிகர்களும் அறிவுஜீவுகளும் சூழ உருவான மக்கள் நீதி மய்யத்தில், தலைவர் கமலை நெருங்கவிடாமல் சிலர் தடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. பணம் படைத்த தொழிலதிபர்களே மநீம வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன.
அண்மையில் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் வேட்பாளருக்காகப் பிரச்சாரத்தில் 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து' என்று கூறியது சர்ச்சையானது. எனினும் அசராமல் தமிழகம் முழுவதும் தங்கள் சின்னமான டார்ச் லைட்டை உயரப் பிடித்து வலம் வந்தார் கமல்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் நடிகர்களையும் திரைத்துறையினரையும் மாநிலத்தின் முதல்வர்களாக்கி அழகுபார்த்த தமிழ் மக்கள், தற்போது கமல்ஹாசனுக்கு ஆதரவு அளித்துள்ளது வாக்கு நிலவரங்களின் மூலம் தெரியவருகிறது.
சென்னை தொகுதிகளில் கமல் 3-வது இடம் (மாலை 6 மணி நிலவரம்)
மத்திய சென்னையில் மக்கள் நீதி மய்யம் 11.75% வாக்குகளைப் பெற்றுள்ளது. அமமுக வெறும் 3.02% வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி 3.94% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல தென்சென்னை தொகுதியிலும் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்ததாக கமலின் மநீம, 12.72% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேபோல நாம் தமிழரின் ஷெரின் 4.25% வாக்குகளோடு இருக்க, அமமுக 2.66 சதவீதத்தில் பின்னுக்குச் சென்றது.
வடசென்னையில் மூவருக்குமான போட்டியில் முந்துகிறார் கமல். அவர் கட்சியின் வேட்பாளர் மவுரியா 10.88% வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் 6.53% வாக்குகளோடு 4-ம் இடத்தில் இருக்க, அமமுகவின் சந்தானகிருஷ்ணன் 3.57% வாக்குகளோடு 5-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மதுரையில் மக்கள் நீதி மய்யமும் அமமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் கணிசமான வாக்கு வங்கியை கமல் கைப்பற்றியுள்ளார். அவரின் மக்கள் நீதி மய்யம் 9.18% வாக்குகள் பெற்றுள்ளது. நாம் தமிழர் 6.24% வாக்குகளையும் அமமுக 3.23% வாக்குகளையும் பெற்றுள்ளனர். புதுச்சேரியில் அமமுக வேட்பாளரால் ஓரிலக்க வாக்குகளைக் கூடப் பெறமுடியாத ( 0.51%) நிலையில் மநீம 4.65% வாக்குகள் பெற்றுள்ளது.
கொங்கு மண்டலத்தைக் கவர்ந்த கமல்
பொதுவாக கொங்குப் பகுதி அதிமுகவின் கோட்டை என்று சொல்லப்பட்டாலும் இம்முறை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே அங்கு முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்துக்கு 3-வது இடத்தைக் கொடுத்து அழகு பார்த்துள்ளனர் கொங்கு மக்கள்.
மாலை 6 மணி நிலவரப்படி, பொள்ளாச்சியில் மநீம 5.58% வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் 2.92 மற்றும் அமமுக 2.43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேபோல சேலத்திலும் அமமுக, நாம் தமிழரைப் பின்னுக்குத் தள்ளி மநீம அதிக வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது.
கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான மகேந்திரன் 11.7% வாக்குகள் பெற்றுள்ளார். இது பாஜக வேட்பாளரின் வெற்றியைப் பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி 4.87% ஓட்டு பெற்றுள்ளது. அதே நேரத்தில் அமமுக வெறும் 3.03% வாக்குகளையே கைப்பற்றியுள்ளது.
ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் கமலே ரேஸில் முந்துகிறார். அவரின் மநீம 4.47% வாக்குகளைப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 3.65% வாக்குகளையும், அமமுக 2.42% வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதேபோல திருப்பூரில் மக்கள் நீதி மய்யத்தின் சந்திரகுமார் 5.75% வாக்குகளைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் 3.76%-மும் அமமுக 3.92%-மும் வாக்குகள் பெற்றுள்ளனர். நீலகிரியில் மநீம 4.07%-ம், அமமுக 4%-ம் வாக்குகள் பெற்றுள்ளன.
இந்தத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நகரத்தவர்களின் ஆதரவு பெருகியுள்ளது தெரியவருகிறது. பணக்காரர்கள், படித்தவர்கள், இளைஞர்களின் வாக்குகளைக் கமல் கைவசப்படுத்தி உள்ளார். நோட்டுக்கு ஓட்டு என்ற கொள்கையை தமிழக மக்கள் சற்றே கைவிட்டுவிட்டதும் புரிகிறது.
சென்னையின் 3 தொகுதிகள், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட கொங்குப் பகுதிகள், மதுரை, திருவள்ளூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் மநீம 3-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
விஜயகாந்தின் இடத்தில் கமலா?
இதன்மூலம் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அறியப்பட்ட விஜயகாந்தின் இடத்துக்குக் கமல் வந்துவிட்டாரா என்ற கேள்வி எழுகிறது. 2005-ல் கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் அப்போது 8.45% வாக்குகளைப் பெற்றிருந்தார். அடுத்துவந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு வங்கியை 10% ஆக அதிகரித்திருந்தார்.
ஆனால் அடுத்தடுத்து அதிமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணியுடன் கைகோத்த தேமுதிக, தனக்கென இருந்த வாக்கு வங்கியை இழந்துவிட்டது. இம்முறை அதிமுக, பாஜகவுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்த தேமுதிக அணி, தேனியைத் தவிர்த்து ஓரிடத்தில் கூட முன்னிலையில் இல்லை.
இந்நிலையில் விஜயகாந்தின் இடத்தை, தேமுதிகவின் வாக்கு வங்கியை, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற சொல்லாடலை கமல்ஹாசன் கைப்பற்றிவிட்டதாகக் குரல்கள் எழுந்துள்ளன.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT