Published : 14 May 2019 04:48 PM
Last Updated : 14 May 2019 04:48 PM
தஞ்சை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் இன்று வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. ஃபானி புயல் உருவாகிச் சென்ற பின், வெயிலின் தாக்கம் உச்சத்தை அடைந்து பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் பல மாவட்டங்களில் இப்போதே தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. மக்கள் குடிநீர் இன்றி குடத்துடன் அலையும் காட்சியைப் பார்க்க முடிகிறது. இதனால், மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே கடந்த இரு வாரங்களாக வெப்பச்சலனம் காரணமாக தமிழக்தின் உள்மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன், கூடிய மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் எழுதி வரும் பிரதீப் ஜான் இன்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
''தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று வெப்பச்சலனத்தால் மழை பெய்ய நல்ல வாய்ப்பு இருக்கிறது. கிழக்கில் இருந்து வரும் காற்றும், மேற்கில் இருந்து வரும் காற்றும் தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களில் நெருக்கமாக வருகிறது. இதனால், பெரும்பாலான உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உண்டு. இன்று மழை பெய்யாத மாவட்டங்கள் கவலைப்படத் தேவையில்லை. நாளை பெய்ய வாய்ப்பு உண்டு.
குறிப்பாக புதுக்கோட்டை, சிவங்கை, தஞ்சை, மதுரை, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி, ஈரோடு, தருமபுரி,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, பெரம்பலூர், திண்டுக்கல், வேலூர் மேற்கு, விழுப்புரம், கடலூர் மேற்குப்பகுதி, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பச்சலனத்தால் மழை பெய்யலாம்.
நிலப்பகுதியில் இருந்து வரும் மேகக்கூட்டங்கள் வங்கக் கடல் பகுதியை அடைந்தால், புதுச்சேரி முதல் நாகை மாவட்டங்கள் வரை கடற்கரைப் பகுதியில் மழை பெய்யவும் வாய்ப்பு உண்டு. சில நேரங்களில் தூத்துக்குடி, ராமநாதபுரத்தில்கூட மழை பெய்யலாம்.
சென்னைக்கு எப்படி?
சென்னையைப் பொறுத்தவரை வழக்கம்போல வெப்பம்தான் கடுமையாக இருக்கும். மழைக்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. மேற்கு திசையில் இருந்து வரும் காற்று வலுவடைந்து, மேகக்கூட்டத்தை கிழக்கு நோக்கி நகர்த்தும்போது சென்னைக்கு மழை உண்டு.
வெப்பச்சலன மழையின் போது இடியுடன் கூடிய மழைபெய்யும் என்பதால், மக்கள் மிகுந்த கவனத்துடன் வெளியே செல்ல வேண்டும். மரங்கள், உயர்ந்த கட்டிடங்கள், கம்பங்கள், திறந்தவெளிகள், வீட்டின் மாடி போன்றவற்றில் நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறேன்''.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT