Published : 25 May 2019 02:27 PM
Last Updated : 25 May 2019 02:27 PM
பத்தாண்டு கால நாம் தமிழர் கட்சியை விட அதிக தொகுதிகளில் 3-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன். கட்சி தொடங்கிய 14 மாதங்களிலேயே கமல்ஹாசன் சந்தித்த முதல் தேர்தல் இது.
திரைத்துறையினருக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கும் தமிழக மக்கள், கமல்ஹாசனின் நம்பிக்கையையும் பொய்க்க விடவில்லை என்பது 17-வது மக்களவைத் தேர்தலின் வாக்கு விவரங்கள் மூலம் தெரியவருகிறது.
12 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம்
திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய 12 இடங்களில் மக்கள் நீதி மய்யம் அமமுக, நாம் தமிழரை முந்தி 3-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக, சென்னையின் மூன்று தொகுதிகளிலும் 10 சதவீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அசத்தியுள்ளனர். கோவையில் நின்ற அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் 11.6% வாக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
இதைக் கூர்ந்து கவனித்தால் நகரங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் கமல்ஹாசனுக்கு ஆதரவு உருவாகி இருப்பது தெரியவரும். அதேபோல படித்தவர்களும் முதல் தலைமுறை வாக்காளர்களும் கமல்ஹாசனுக்குப் பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் 3.89% வாக்குகளைப் பெற்ற சூழலில், மக்கள் நீதி மய்யம் அதைவிட 0.12% வாக்குகளை மட்டுமே குறைவாகப் பெற்று, 3.72 சதவீதத்தைக் கைப்பற்றியுள்ளது.
அறிமுகக் களத்திலேயே மக்கள் நீதி மய்யம், தமிழக வாக்காளர்களைக் கவர்ந்தது எப்படி?- இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரனிடம் பேசினோம்.
''இதற்கு பல்வேறு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது கட்சியின் கொள்கை மற்றும் தலைமை மீதான ஈர்ப்பு. மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரையில் சாதியோ, மதமா, பூர்வீகமோ பிரச்சினையில்லை, தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சமம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாகக் கறைபடிந்த கைகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உறுதியாக இருந்தது.
மூன்றாவதாக, குறுகிய காலமே இருந்ததால், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முறையாகப் பிரபலப்படுத்த முடியவில்லை. கமல்ஹாசனை மக்கள் அறிந்திருந்தாலும் சின்னத்தை பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை. டார்ச் லைட் சின்னம் கிடைத்தபோது எங்களுக்கு 18 நாட்களே எஞ்சியிருந்தன. அதனால் எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்க்கமுடியவில்லை.
இதனால் சின்னம், வேட்பாளர் குறித்த விழிப்புணர்வை கிராமத்தில் முறையாக ஏற்படுத்த முடியவில்லை. வருங்காலத் தேர்தல்களில் இது சரிசெய்யப்பட்டு, அதிக வாக்கு வங்கியை உருவாக்குவோம்'' என்றார் மகேந்திரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT