Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM
கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு குளுகுளு சீசனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானலில் கடந்த மாதஇறுதியில் கோடை மழை பெய்தது. இதைத் தொடர்ந்து கோடை சீசன் தொடங்கியது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு, பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஆகியவற்றால் கடந்த மாத இறுதியில் கொடைக்கானலுக்கு பயணிகள் குறைந்த அளவே வந்தனர். சமீபத்தியில் புயல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் வருகையைப் பாதித்தது.
இந்நிலையில் கோடை சீசன் முழுமையாகத் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாத் தலங்களான மோயர் பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, துாண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா,குறிஞ்சியாண்டவர் கோயில் ஆகிய இடங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர். பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் ஆயிரக்கணக்கான மலர்களையும் பார்த்து ரசித்தனர். ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.
தொலைதுாரத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் ஒரு சில நாட்கள் தங்கி இயற்கையை ரசித்துச் செல்வது வழக்கம். இந்தஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவையடுத்து விதிகளைமீறிய விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகளுக்கு தவிக்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகையை அடுத்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலைகள் ஒருவழிச் சாலையாக மாற்றப்பட்டதால் போக்குவரத்து சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.
வழக்கமாக கொடைக்கானலில் மே மாதம் 2-வது வாரத்தில் மலர் கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு தேர்தல் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படாததால் கோடை விழா நடத்துவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மே 25, 26 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடைபெற வாய்ப்புள்ளது. முன்னதாக, மே 17-ம் தேதி எளிய முறையில் கோடை விழாவைத் தொடங்கமாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு விழாவின் இறுதியாக மலர் கண்காட்சியை வைத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT