Published : 09 May 2019 01:09 PM
Last Updated : 09 May 2019 01:09 PM
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் புதன் நள்ளிரவில் நடந்த கோரவிபத்தில் பெண் காவலர், அவரது மகள், மகளின் தோழி உட்பட 4 பேர் மரணம் அடைந்த பரிதாப சம்பவம் நடந்தது.
மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது சித்தி மகள் ஜோதி(34). இவர், ஆயுதப்படை பிரிவில் கிரேடு-1 காவலராக பணி புரிந்தார். தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், புதன் கிழமை (நேற்று) இரவு 11.30 மணி அளவில் தனது தோழியான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வருவாய் உதவியாளர் சத்தியவாணி (44), மற்றும் மகள் சூரியகலாவை(14) ஆகியோரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஜெய்ஹிந்த்புரம் பகுதியிலுள்ள ஜீவா நகர் நோக்கிச் சென்றார்.
திருப்பரங்குன்றம் சாலையில் மதுரைக் கல்லூரி அருகே மேம்பாலத்திற்கு இடது புறமுள்ள சர்வீஸ் ரோட்டில் செல்லும்போது, அதே சாலையில் எதிர்த்திசையில் நெல்லையில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற தனியார் டிராவல்ஸ் பேருந்து தடமாறி வலதுபுறமாக சென்று ஜோதியின் பைக் மீது மோதியது.
தொடர்ந்து ஜோதிக்கு பின்னால் வந்த ஜவுளிக்கடை ஊழியர் ஆனந்தன் மற்றும் பிரவீன் ஆகியோரின் இரு சக்கர வாகனமும் மீதும் அந்த பேருந்து அடுத்தடுத்து மோதியது.
இந்த பயங்கர விபத்தால் ஜோதி உட்பட 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். காவலர் ஜோதி, சத்யவாணி, ஜவுளிக்கடை ஊழியர் மணப்பாறை ஆனந்தன் (22) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். பிரவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மதுரை நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் தனியார் பேருந்து ஓட்டுநர் புதுக்கோட்டை மாவட்டம் கதவம்பட்டியைச் சேர்ந்த தர்மராஜை கைது செய்தனர். இரவு நேரத்தில் கவனக்குறைவால், அதிவேகத்தால் பேருந்து இயக்கிய விபத்து ஏற்படுத்தி 4 பேரை பலி கொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT