Published : 02 May 2019 12:00 AM
Last Updated : 02 May 2019 12:00 AM

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களுக்கு தடை விதித்தும் பன்னாட்டு குளிர்பான பாக்கெட்டுடன் இணைத்து விநியோகம்: தண்டனை விவரங்கள் அமலுக்கு வந்தும் நடவடிக்கை இல்லை

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் விற்கப்படும் பன்னாட்டு குளிர்பான பாக்கெட்களில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் இணைத்து வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பேப்பர் தட்டுகள் மற்றும் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், உறிஞ்சு குழல்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை, கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கான தண்டனை குறித்த சட்ட மசோதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. இதுதொடர்பான சட்டம் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையும், விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் வரையும் அபராதம், நிறுவனங்களுக்கு சீல் வைத்தல் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும். வணிக வளாகங்கள், பெரிய மளிகைக் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரையும், சிறிய கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் வரையும் அபராதம், கடைகளை நிரந்தரமாக மூடுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

இதுபோன்ற தண்டனை விவரங்கள் அமலுக்கு வந்த நிலையிலும், பல பன்னாட்டு நிறுவன குளிர்பான பாக்கெட்களுடன், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் இணைத்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: தமிழக அரசு ஒரு சட்டத்தை கொண்டு வந்தால், அதை பாரபட்சமின்றி நிறைவேற்ற வேண்டும். சிறு நிறுவனங்களிடம் கடுமை காட்டி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பான பாக்கெட்களுடன் இணைத்து வழங்கப்படும் உறிஞ்சு குழல்களும், தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களில் ஒன்று. ஆனால் இதுவரை குளிர்பான பாக்கெட்களை யாரும் பறிமுதல் செய்யவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் தயாரிக்கும் குளிர் பானங்களுடன் இணைக்கப்படும் உறிஞ்சுக் குழல்கள் காகிதத்தில் இருக்கும்போது, அதேபோன்ற உறிஞ்சு குழல்களை தயாரிக்க பன்னாட்டு நிறுவனங்களை அரசு நிர்பந்திக்க வேண்டும். தற்போது தண்டனை விவரங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கலாம்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

பன்னாட்டு குளிர்பானங்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்களில் தயாரிக்கப்படுகின்றன. அதனால் உற்பத்தி நிறுவனங்கள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது. வெளிமாநிலங்களில் தயாரித்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வருவதால், உள்ளாட்சி அமைப்புகளால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலர் தலைமையில், பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவை கடைபிடிப்பது, பன்னாட்டு நிறுவன பொருட்கள் அடைக்கப்பட்ட பல்லடுக்கு உறைகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x