Published : 11 May 2019 08:31 AM
Last Updated : 11 May 2019 08:31 AM
வன விலங்குகளில் மாமிசப் பட்சிகள் உள்ளன. ஆனால், தாவரங்களில் மாமிசப்பட்சிகள் இருக்கிறது தெரியுமா? ஆம், சிலவகைத் தாவரங்கள் பூச்சிகளை உண்ணுகின்றன.
நீலகிரி உயிர் சூழல் மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் உள்ளன. இவற்றில் பூச்சிகளை உண்ணும் தாவரங்களும் அடங்கும். உதகை அருகேயுள்ள கிளன்மார்கன், பைக்காரா மற்றும் நடுவட்டம் போன்ற பகுதிகளில் பூச்சிகளை உண்ணும் தாவரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.பூச்சிகளை உண்ணும் அபூர்வ வகை தாவரங்களில் ஒன்றான டிரோசிரா பர்மானியா, டிரோசிரா பெல்டேட்டா, டிரோசிரா இண்டிகா போன்ற தாவரங்கள், குளிர் பிரதேசங்களான வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
இந்தியாவில் ஒரு சில இடங்களில் காணப்பட்ட போதிலும், நீலகிரி மாவட்டத்தில் குளிர் அதிகமாக காணப்படும் பைக்காரா, கிளன்மார்கன், அப்பர்பவானி, நடுவட்டம் போன்ற பகுதிகளில் இவை வளர்கின்றன. குளிர் காலத்தில்தான் இவற்றின் வளர்ச்சி இருக்கும். சதுப்பு நிலங்களில் மற்றும் புற்களின் நடுவே ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் இவற்றைக் காணலாம். இவை சிறிய பூச்சிகளை உட்கொள்கின்றன.
இந்த தாவரங்கள் பூக்கள் வடிவில் காணப்படுகின்றன. அவற்றின் மீது மஞ்சள் நிறத்தில் சிறு சிறு இலைகள் உள்ளன. இவை பூச்சிகளைக் கவரக்கூடிய சுரப்பிகளை சுரக்கின்றன. பூச்சிகள் இந்தச் செடிகள் மீது அமரும்போது, பூச்சிகள் சுரப்பிகளில் சிக்கிக்கொள்கின்றன. அவற்றை இந்த தாவரம் உட்கொள்கிறது.
உதகை அருகே எமரால்டில் உள்ள மத்திய ஹோமியோபதி ஆய்வு மையத்தில் தாவரவியல் வல்லுநராகப் பணியாற்றி வரும் டாக்டர் எஸ்.ராஜன் கூறும்போது, “டிரோசிரா வகை தாவரங்கள், மருத்துவக் குணங்கள் கொண்டவை. ஹோமியோபதி மருத்துவத்தில் இந்த தாவரத்தின் பயன்பாடு அதிகம்.
இந்த தாவரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, ஆஸ்துமா, சளி, தொண்டை வலி, தீராத இருமல், அல்சர், தோல் வியாதிகள் போன்றவைகளுக்குப் பயன்படுகிறது. இதை சில நாட்டு வைத்தியர்கள், மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தங்கத்தைக் கரைக்கும் திறன்கொண்ட இந்த தாவரங்கள், தங்க பஸ்பம் தயாரிக்கவும் பயன்படுகின்றன. இந்த தாவரங்களைக் கொண்டு தங்கத்தைக் கரைத்தால், அது உட்கொள்வதற்கு ஏற்ற மருந்தாக மாறிவிடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT