Published : 20 May 2019 08:31 AM
Last Updated : 20 May 2019 08:31 AM

பாதுகாப்பற்ற சூழலில் அணைகளை பாதுகாக்கும் போலீஸார்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸார், எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத சூழலில் பணியாற்றுகின்றனர்.

தமிழகத்தின் தண்ணீர்த் தொட்டியான நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மாயாறு,பவானி ஆகியவை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் குடிநீர், பாசனத் தேவைகளைப் பூர்த்திசெய்து, பின்னர் காவிரியுடன் கலக்கின்றன.

இந்த மாவட்டத்தில் உள்ள  எமரால்டு, முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயாறு, பார்சன்ஸ் வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, அப்பர்பவானி அணைகளில் தேக்கிவைக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது.

குந்தா, பைக்காரா புனல் நீர்மின் திட்டத்தின்கீழ், 12 மின் நிலையங்கள் மூலம் 833.77மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  செய்யப்படுகிறது. இதில், நீலகிரி மாவட்டத்துக்கு 70 மெகாவாட் மட்டுமே பயன்படுகிறது.

மீதமுள்ள மின்சாரம் ஈரோடு மின் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அணைகளைப்  பாதுகாக்கும் முக்கியமான பணியில் ஈடுபடும் போலீஸார், உரிய பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்.

மஞ்சூரை அடுத்துள்ள பென்ஸ்டாக், கெத்தை, அப்பர்பவானி அணைகளின் பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டுள்ள போலீஸார் தங்குவதற்கு, பாதுகாப்பற்ற தகர ஷெட்டுகளே அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு கோடைகாலம் தவிர,  பெரும்பாலான நாட்களில் மழை பெய்யும் அல்லது பனி கொட்டும். இந்த சூழலில், தங்குவதற்கு பாதுகாப்பான இடவசதி கிடையாது. சுற்றியுள்ள நான்குபுறமும் தகரத்தாலானது. மேலும், கூரையும் தகரத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெயில் காலங்களில் கடும் வெப்பம் நிலவும். பனிக் காலத்தில் கடும் குளிராக இருக்கும்.  மழைக்காலத்தில் உள்ளேயே தண்ணீர் சூழ்ந்திருக்கும்.

வன விலங்குகள் நடமாட்டம்!

மேலும், பென்ஸ்டாக், கெத்தை, அப்பர்பவானி பகுதிகள் வனத்தில் அமைந்துள்ளதால், வன விலங்குகளின்  நடமாட்டமும் அதிகம் இருக்கும். குறிப்பாக, கெத்தை, பென்ஸ்டாக் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம். வனத்தில் உணவு, தண்ணீர் இல்லாததால், அவற்றைத் தேடி யானைகள் ஊருக்குள் நுழைகின்றன. சில நாட்களுக்கு முன்,  மேல்முள்ளி பகுதியில் 5  காட்டு யானைகள் சேர்ந்து, இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

  தொடர்ந்து, பல்வேறு பயிர்களையும்  நாசம் செய்தன.  மஞ்சூரை அடுத்த கரியமலைப் பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, அங்கு  பணியாற்றிக் கொண்டிருந்த முதியவரை துரத்தியது. மக்கள் சப்தமிட்டதால், அதிர்ஷ்டவசமாக முதியவர் தப்பினார்.

இவ்வளவு ஆபத்து நிறைந்த பகுதிகளில், போலீஸ்காரர்கள் தங்கும் ஷெட்டுகளை  யானைகள் சேதப்படுத்தி விடுகின்றன.  மிகுந்த அச்சத்துடனேயே இரவுப் பொழுதைக் கழிக்கின்றனர் காவல் துறையினர்.

மேலும், அடர்ந்த வனப் பகுதியில் பணிபுரிவதால், தேவையான உணவையும், அவர்களை சமைத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் உணவு தயாரிப்பு மிகுந்த சிரமமுள்ளதாக இருக்கும். சமையலுக்குத் தேவையான தண்ணீர், விறகு உள்ளிட்டவற்றை வனத்திலிருந்து சேகரித்து வரவேண்டும்.அணைகளின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார், மின்சாரத் துறையின் கண்காணிப்புக் குழு கட்டுப்பாட்டில் உள்ளனர். இதனால்,  உள்ளூர் காவல் துறையிடமிருந்து எவ்வித உதவியையும் எதிர்பார்க்க முடியாது.

அணை பாதுகாப்பு மசோதா!

இந்நிலையில், அணை பாதுகாப்பில் ஈடுபடும் போலீஸாருக்கு, கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட ‘அணை பாதுகாப்பு மசோதா’ பயனளிக்கும் என்கின்றனர்  போலீஸார்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக  இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான அணைகள் உள்ளன. கடந்த ஆண்டுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ள  அணை பாதுகாப்பு மசோதா, நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்புக்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, மத்திய, மாநில அளவில் அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வழிவகுக்கிறது. இதன்படி, தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும்.

அணை பாதுகாப்புக்கான தேசிய கமிட்டி,  கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும். இதன் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரின் பணிச் சூழலை மாற்றியமைக்கும் வாய்ப்பு உள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x