Last Updated : 24 May, 2019 12:00 AM

 

Published : 24 May 2019 12:00 AM
Last Updated : 24 May 2019 12:00 AM

கருத்து கணிப்புகளை பொய்யாக்கி திருப்பூரில் வெற்றி பெற்ற கே.சுப்பராயன்

மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியில் அனைத்து வித கருத்து கணிப்புகளையும் தாண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் வெற்றி பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே, நிச்சய மாக வெற்றி பெறுவோம் என அதிமுக நம்பிக்கை தெரிவித்த தொகுதிகளில் ஒன்று திருப்பூர். அதற்கு காரணங்கள் உண்டு. திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர், 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடை பெற்றுள்ளது. இரு தேர்தல் களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, அந்தியூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் 2009-க்கு முன் கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் இருந்தன. 1952 முதல் 2004 வரை நடந்த 13 மக்களவைத் தேர்தல்களில் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக 3 முறையும் வென்றுள்ளன. இவ்வாறு வழக்கமாக அமைந்துள்ள அதிமுக வாக்கு வங்கி மற்றும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுகவின் எம்.எல்.ஏ.-க்கள் பதவியில் இருப்பது பெரும் பலமாக கருதப்பட்டது.

மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.சத்தியபாமா 4 லட்சத்து 42 ஆயிரத்து 778 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக கூட்டணி 2 லட்சத்து 63 ஆயிரத்து 463 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பெற்றது. திமுக 2 லட்சத்து 5,411 வாக்குகளும், காங்கிரஸ் 47,554 வாக்குகளும் பெற்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட கே.சுப்பராயன் 33 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.

2019 தேர்தலில் அதிமுக கூட்டணி யில் தேமுதிக, பாமக, பாஜக-வும் வந்ததால் வாக்கு சதவீதம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை ஒப்பிடும் போது சரிபாதிக்கும் குறைவாகவே இருந்தது. இதுபோன்ற காரணங் களால் திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறுவது இயலாத காரியம் என்றே கருத்து கணிப்புகள் தெரிவித்தன. மத்திய, மாநில நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் திருப்பூரில் அதிமுகவே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி 5 லட்சம் வாக்கு களுக்கு மேல் பெற்று கே.சுப்பராயன் திருப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் இறுதி வரை அதிக வாக்குகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்த வெற்றி மூலமாக திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.வெற்றி குறித்து கே.சுப்பராயன் கூறும் போது, ‘மக்களுக்கு அதிமுக மீதான நம்பிக்கை போய் விட்டது. அதிமுகவின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததே கொங்கு மண்டலத்தில் அவர்கள் தோற்க முக்கியமான காரணம். 1999-க்கு பிறகு பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அதை கடைசி வரை பின்பற்றினார். ஆனால் தற்போதுள்ள அதிமுகவினர் அதை மறந்து விட்டனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x