Published : 01 Apr 2014 08:36 AM
Last Updated : 01 Apr 2014 08:36 AM
மக்களவைத் தேர்தலில் பயன்படுத்த, வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் பெருமளவில் பணம் கடத்தப் படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பல்களில் அதிகாரிகள் திங்கள்கிழமை மீண்டும் சோதனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலில் பயன் படுத்த, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் மற்றும் தங்கம், போதை பொருள்கள், கள்ள நோட்டுகள் கப்பல்கள் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கடத்தி வரப்படுவதாக, சென்னை தேர்தல் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. மொத்தம் ரூ.5,600 கோடி ரொக்கம் மற்றும் பொருள்கள் கடத்தப்படுவதாக மர்ம தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்களில் சோதனை
இதுகுறித்து, சென்னையில் உள்ள தேர்தல் அலுவலர்கள் தூத்துக் குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு கடந்த சனிக்கிழமை காலை தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, வட்டாட்சியர் கிருஷ்ணன் தலைமையில் இரண்டு குழுவினர் சுங்கத்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கடலோர காவல் படையினர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
மியான்மரில் இருந்து மரக்கட்டைகள் ஏற்றி வந்த கப்பல், மலேசியாவில் இருந்து பாமாயில் ஏற்றி வந்த கப்பல், சிங்கப்பூரில் இருந்து பர்னஸ் ஆயில் ஏற்றி வந்த கப்பலில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நள்ளிரவு 11.45 மணி வரை சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் ஆய்வு செய் தார். கப்பல்களுக்கு சென்று அவரும் சோதனை நடத்தினார். நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையில் 3 கப்பல்களிலும் பணமோ அல்லது வேறு எந்த பொருள்களோ பறிமுதல் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் சோதனை
இந்நிலையில், வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் திங்கள்கிழமை காலை மீண்டும் 3 கப்பல்களிலும் சோதனை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. மேலும், இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த பியூட்டிபுள் ரெனா என்ற கப்பலிலும் திங்கள்கிழமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையிலும் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை நடத்திய வட்டாட்சியர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது, மேலிடத்தின் உத்தரவு பேரில் இந்த சோதனையை நடத்துகிறோம். இதன் விவரங்களை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துவிட்டோம். உங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என மறுத்துவிட்டார்.
ஆயில் கப்பல்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா.துரை கூறுகையில், தேர்தல் ஆணையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பின் அடிப் படையில், இந்த சோதனை நடத்தப் படுகிறது.
கடந்த சனிக்கிழமை முதல் கட்டமாக 3 கப்பல்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 2 ஆயில் டேங்கர் கப்பல்களில் ஆயில் அனைத்தும் இறக்கப்பட்டதை தொடர்ந்து திங்கள்கிழமை மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த இரு கப்பல்களிலும் சந்தேகப்படும் வகையில் எதுவும் இல்லை. சோதனை முடிந்ததை தொடர்ந்து அந்த இரு கப்பல்களும் ஓரிரு தினங்களில் தூத்துக்குடியில் இருந்து கிளம்பிச் செல்லும்.
மரக்கட்டை ஏற்றி வந்த கப்பலை பொறுத்தவரை அதில் பூச்சிகள், பாம்புகள் இருக்கும் என்பதால் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்போது அந்த கப்பலுக்குள் செல்ல முடியாது. அந்த கப்பலில் சோதனை நடத்த 2 நாட்கள் ஆகும். சோதனை முடிந்ததும் அக்கப்பலும் தூத்துக்குடியை விட்டு கிளம்பிச் செல்லும்.
தேர்தல் ஆணையத்துக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் பேசியது யார், எங்கிருந்து பேசினர் போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியிலும் போலீஸார் ஈடுபட்டுள் ளனர் என்றார் எஸ்.பி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT