Published : 14 May 2019 12:00 AM
Last Updated : 14 May 2019 12:00 AM
திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர் களைக் கவர கடைசி ஆயுதமாகப் பணம் விநியோகத்தில் முக்கியக் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன. தடுக்க வேண்டாம் என்பதில் முக்கியக் கட்சிகள் தங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொண்டதால் இதுவரை பெரிய அளவில் புகார்கள் கிளம்பவில்லை.
திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மே 19-ல் நடக்கவுள்ளது. இத்தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் மக்களைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றன.
முதல்வர், துணை முதல்வர் 2 கட்டப் பிரச்சாரத்தை நேற்றுடன் முடித்துவிட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 3, 4-ம் தேதிகளில் முதற்கட்ட பிரச்சாரம் செய்தார். நாளை (மே 15) 2-ம் கட்டப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 17-ம் தேதி இறுதிகட்டப் பிரச்சாரத்தில் நடிகர் உதயநிதி ஈடுபடுகிறார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மே 1, 2 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்ட பிரச்சாரத்தை முடித் துள்ளார். வரும் 16-ம் தேதி 3-ம் கட்ட பிரச்சாரம் செய்கிறார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவலர் சீமான் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். கட்சியினர் வீடு,வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் 15 மாவட்ட நிர்வாகிகள் என 1 லட்சம் பேர் வரை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஏற்கெனவே வாக்குச்சாவடி வாரியாக, ஒரு வாக்குச்சாவடிக்கு 20 பேர் வீதம் கமிட்டி அமைத்துள்ளனர். வாக்காளர்களின் முகவரி, தொழில், செல்போன் எண், சமுதாயம், கட்சியின் பின்னணி, தற்போதைய நிலை என பல புள்ளி விவரங்களுடன் பட்டியலைக் கட்சியினர் தயாரித்து உள்ளனர். இந்தப் பட்டியலை வைத்துக் கொண்டே தினமும் வாக்காளர்களை அணுகி வருகின்றனர். அனைத்து வீடுகளுக்கும் காலை, மாலை என 2 வேளைகளிலும் கட்சியினர் சென்று ஆதரவு திரட்டுகின்றனர். வாக்காளர் களுக்கு பணம் வழங்க முக்கியக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில் தொகுதிக்குள் போலீஸார் ரோந்துப் பணியை 2 நாட்களாகத் தீவிரப் படுத்தியுள்ளனர். இரவில் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கட்சியினர் கூறியதாவது: அதிமுக, திமுக, அமமுக ஆகியவை 50 வாக்காளர்கள் அல்லது 20 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளன. இவர்களைப் பற்றிய முழு விவரம் வாக்காளர்களுக்கும் தெரிகிறது. இதனால் 20 வீடுகளுக்குப் பணம் வழங்க அதிகபட்சம் 20 நிமிடங்கள்தான் ஆகும். புகார் வரும் முன்பே பணத்தை வழங்கி முடித்துவிடுவார்கள். ஒரு வாக்குக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000-வரை வழங்க உள்ளதாகவும், 40 முதல் 80 சதவீத வாக்காளர்களுக்கு இந்த விநியோகம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு கட்சியினர் பணப் பட்டுவாடா செய் தால் பிற கட்சியினர்தான் புகார் அளிக்க வேண்டும். அத்தகைய கட்சிகளும் பணம் தரும் திட்டத்தில் இருப்பதால், நாளை நமக்கு சிக்கல் எனக்கருதி அமைதி காக் கின்றனர். மேலும் பணம் தர விடாமல் தடுத்ததாக பெயர் வந்தால், வாக்காளர் களின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதால் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது. இத்தகைய சூழல் பணம் வழங்குவது குறித்து புகார் எழாமல் இருப்பதற் குச் சாதமாகிவிடுகிறது. புகார் வந் தால் நடவடிக்கை எடுக்க தேர்தல் அலுவலர்கள் தயாராக இருந்தாலும், அத்தகைய சூழல் எழாமல் கட்சியினரே பார்த்துக்கொள்கின்றனர். பணம் வழங்க திட்டமிட்டுள்ள கட்சிகள் இதை 14-ம் தேதி இரவுக்குள் முடித்துவிடும். பின்னர் இதன் தாக்கம், வெற்றி வாய்ப்பு, பணம் வழங்கியதில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடக்கும். இதில் சில குறைகள் இருந்தால் உடனே நிவர்த்தி செய்துவிடுவர் என்றனர்.
கட்சிகள் பணப் பட்டுவாடா செய்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT