Published : 23 May 2019 06:11 PM
Last Updated : 23 May 2019 06:11 PM
தந்தையின் மறைவுக்குப் பின், முதல் பொதுத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து, விட்டுக்கொடுத்து வென்றுள்ளார் ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் வியூகத்தில் வல்லவர் என்று பெயரெடுத்தவர். 1971-ல் எம்ஜிஆர் துணையுடன், அன்றைய காங்கிரஸ் பிளவுபட்ட நிலையில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸுடன் இணைந்து திமுகவுக்கு இமாலய வெற்றியைத் தேடிக்கொடுத்தவர்.
1989-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக பிளவுபட்ட நிலையில் தேர்தலைச் சந்திக்க, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அவர்கள் முகம் கோணாமல் தொகுதிகளை ஒதுக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
அதேப்போன்று தேசிய அளவிலும் கட்சிகளை இணைப்பதிலும் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் கருணாநிதி வெற்றி கண்டார். 1984 எம்ஜிஆர் உடல் நிலை, இந்திரா கொல்லப்பட்டது, 1991- ல் ராஜிவ் கொல்லப்பட்ட சம்பவம் போன்ற காலகட்டங்களில் திமுக தோல்வியைச் சந்தித்தாலும் அடுத்த முறை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதில் சாமர்த்தியம் காட்டியவர்.
1993-ல் மதிமுகவால் திமுக பிளவுண்டபோதும் அதைப்பற்றிப் பொருட்படுத்தாமல் அன்றைய அதிமுக அரசுக்கு எதிராகவும், காங்கிரஸுக்குள் ஏற்பட்ட பிளவைப் பயன்படுத்தியும், அதிமுக எதிர்ப்பாளரான ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைத்தும் 1996-ல் பெருவாரியான வெற்றி பெற்றவர் கருணாநிதி.
அது தொடர்கதையாக இருந்ததை பலமுறை தமிழகம் கண்டுள்ளது. காங்கிரஸையும், கம்யூனிஸ்ட்டுகளையும் ஒரே கூட்டணிக்குள் கொண்டுவந்தவர். கூட்டணிக் கட்சிகளை தேர்தல் நேரத்தில் அரவணைத்து திமுக பக்கம் இழுப்பதிலும், கூட்டணி அமைப்பதிலும் வல்லவர் கருணாநிதி என்று பெயர் எடுத்தவர்.
அவரது ஆளுமையின் கீழ் வளர்ந்த ஸ்டாலின் கருணாநிதியின் மறைவுக்குப் பின் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஸ்டாலின் தந்தையைப்போல் அல்ல கரடுமுரடானவர், விட்டுக்கொடுக்க மாட்டார் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.
ஆனால் அனைத்தையும் முறியடித்து, கூட்டணிக் கட்சிகளுக்கு வழக்கமாக உள்ள எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி யார் மனமும் கோணாமல் 22 தொகுதிகளில் திமுக மட்டுமே நிற்கும் என்பதையும் உறுதிப்படுத்தி அனைவரையும் ஏற்கச்செய்தார்.
2014-ல் அதிமுக பரிசாகக் கொடுத்த பலத்த தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுக கூட்டணி வெற்றிபெற கடுமையாக உழைத்துள்ளதன் மூலம் தந்தையின் மறைவுக்குப் பின் தலைமை ஏற்று தனது தலைமையின்கீழ் தான் சந்தித்த முதல் பொதுத்தேர்தலில் திமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT