Last Updated : 22 May, 2019 08:46 AM

 

Published : 22 May 2019 08:46 AM
Last Updated : 22 May 2019 08:46 AM

சாயக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு: பொது சுத்திகரிப்பு நிலையம் கனவு நனவாகுமா?

கொங்கு மண்டலத்தில் அந்நியச் செலவாணியை ஈட்டித்தருவதில் முக்கியப் பங்கு ஜவுளித் தொழிலுக்குத்தான் உள்ளது.  ஜவுளித் தொழிலிலுக்கு ஆணிவேராக இருப்பது சாயத் தொழில். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சாயத்தொழில்,  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் கணிசமான அளவு மேற்கொள்ளப்படுகிறது.

அதேசமயம், சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும், சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளால் நேரிடும் பாதிப்புகளும் அதிகம் என்று பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.

சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகள்,  குமாரபாளையம், பள்ளிபாளையம் வழியாக  காவிரி ஆற்றில் நேரடியாக கலக்கப்படுகின்றன. இதனால், காவிரி ஆற்றின் நீர் மாசடைந்து, நீரில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீரால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன், அதைப் பயன்படுத்தும் மக்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக புகார்கள் எழும் சமயங்களில்,  மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்,  பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் ஆய்வு நடத்தி, அனுமதி பெறாத சாய ஆலைகளுக்கு `சீல்’ வைத்தல், அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனாலும், மீண்டும் சாய ஆலைகள் இயங்குவதாக புகார்கள் எழத் தொடங்கும். இதற்கு நிரந்தரத்  தீர்வுகாணும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

இதையடுத்து, 2014-ல் சட்டப்பேரவையில், ரூ.700 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரசாணையும்  வெளியிடப்பட்டது. திட்டத்தின்  மொத்த நிதியில் 50 சதவீதம் மத்திய, மாநில அரசுகளும், 25 சதவீதம் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கமும் வழங்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தை,  சாயப்பட்டறை உரிமையாளர் சங்கத்தினர் தேர்ந்தெடுத்து வழங்கினர். எனினும், திட்டம் அறிவித்து 5 ஆண்டுகளாகியும்,  பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால்,  சாயக்கழிவு பிரச்சினை தீர்வை நோக்கி நகராமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, சாயப்பட்டறை உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சாயப்பட்டறை உரிமையாளர்கள் சிலர் கூறும்போது, “2014-ல் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களிலும், மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என  சட்டப்பேரவைக் கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. இதுவரை திட்டம் தொடங்கப்படவில்லை. அலுவலக ரீதியான பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

குமாரபாளையம் மற்றும் பள்ளி பாளையத்தில் செயல்படும் அனுமதி பெறாத மற்றும் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகளுக்காக மொத்தம் ரூ.280 கோடியில் இரு  சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இதற்காக பல்லக்காபாளையத்தில் மொத்தம் 37 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் வாங்கித் தரப்பட்டுள்ளன.  தமிழ்நாடு நீர் முதலீட்டுக் கழகம் இந்த திட்டத்தை செயல்படுத்தும். இதுவரை கட்டிடப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதேபோல, ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களிலும் பொது சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தொடங்கப்படவில்லை.

பிரச்சினையின் தீவிரம் காரணமாக, ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் தங்களது தறிகளை விற்பனை செய்யும் நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளனர். விற்பனையாகாத தறிகளை  எடைக்குப்போடும் பரிதாப சூழலும் நிலவுகிறது. மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், இனியாவது பணிகளைத்  துரிதப்படுத்தி, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x