Published : 24 May 2019 03:52 PM
Last Updated : 24 May 2019 03:52 PM

திமுக கோட்டைக்குள் கொடி நாட்டிய அதிமுக: 9 சட்டப்பேரவை தொகுதிகள் சுவாரஸ்யம்

மக்களவையில் வென்ற தொகுதியில் திமுக அதிமுகவை குழப்பும் வகையில் சட்டப்பேரவை முடிவுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவை தொகுதியில் திமுக வென்றாலும் அதிமுக அதற்குள்ளே 9 சட்டப்பேர்வை தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல அணிகள் தனித்தனியாக போட்டியிட்டாலும் அதிமுக தலைமையிலான பாஜக, தேமுதிக, பாமக அணியும், திமுக தலைமையிலான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிகே அணியும் முக்கிய போட்டியாளர்கள் ஆவர்.

மற்றபடி அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் நின்றன. தேர்தல் முடிவு திமுகவுக்கு இமாலய வெற்றியையும், அதிமுகவுக்கு படுதோல்வியையும் கொடுத்தது. தமிழகம் பாண்டி சேர்த்து 39 மக்களவை தொகுதிகளில் திமுக கூட்டணி 38 இடங்களையும், அதிமுக கூட்டணி 1 இடத்தையும் பெற்றது.

22 சட்டப்பேரவை தொகுதிகளில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும் பெற்றது. இதில் வினோதமான குழப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என்னவென்றால் மக்களவை தேர்தலில் அதிமுக வென்ற தொகுதியில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வென்றுள்ளது.

திமுக வென்ற மக்களவை தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. திமுக இமாலய வெற்றிப்பெற்ற பல மக்களவை தொகுதிகளில் நடந்த சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. 

அதிமுக வென்ற 9 சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்ற மக்களவை தொகுதிகள் ஆகும். ஒரே நேரத்தில் நடந்த தேர்தலில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்த முடிவு வந்துள்ளது.

தூத்துக்குடி திமுக கூட்டணி வென்ற தொகுதி இந்தத் தொகுதிக்குள் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி வருகிறது. இங்கு ஆரம்பம் முதலே அதிமுக முன்னணியில் இருந்தது. கடைசிவரை அதே முன்னணியில் அதிமுக வென்றது. இத்தொகுதி கனிமொழி பொறுப்பாளராக செயல்பட்டார். தூத்துக்குடியில் திமுக வென்றாலும் அதில் அடங்கியுள்ள விளாத்திக்குளம் அதிமுக வசம் சென்றது.

இதேப்போன்று திமுக வென்ற தர்மபுரி மக்களவை தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகள் அதிமுக வென்றுள்ளது. கோவையில் லட்சக்கணக்கான வாக்கு வித்யாசத்தில் திமுக கூட்டணி வென்றாலும் சூலூர் தொகுதியை அதிமுக தக்க வைத்துக்கொண்டது.

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக அமோக வெற்றி பெற்றாலும் அதில் அடங்கியுள்ள பரமக்குடி தொகுதியில் அதிமுக வென்றுள்ளது. இதேப்போன்று விருது நகர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சாத்தூர், சிவகங்கைக்கு உட்பட்ட மானாமதுரை, அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் தொகுதிகள் அடக்கம்.

இதில் முக்கியமாக குறிப்பிடவேண்டியது தமிழகத்தில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதி திண்டுக்கல். இங்கு 5,38,972 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி. இங்குள்ள நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக எளிதாக வென்றுள்ளது.

இதேப்பொன்ற சுவாரஸ்யம் திமுகவுக்கும் நடந்துள்ளது. அதிமுக வென்ற ஒரே நட்சத்திர தொகுதி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வென்ற தேனி தொகுதி. இத்தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் ஆரம்பம்முதலே திமுக முன்னிலையில் இருந்து கைப்பற்றியது.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x