Published : 21 May 2019 12:00 AM
Last Updated : 21 May 2019 12:00 AM
போக்சோ சட்டத்தின் கீழ் 10 சதவீதத்துக்கும் கீழான குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக போக்சோ சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் பதிவு செய்யும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் தேக்க நிலையே இருந்து வருகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டு 1065 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 73. அதில் தண்டிக்கப்பட்டவர்கள் 65. 2015-ம் ஆண்டு 1,544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 133 வழக்குகளில் தீர்ப்பு பெறப்பட்டு 143 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். 2016-ம் ஆண்டு 1,583 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீர்ப்பு பெறப்பட்ட வழக்குகள் 199, தண்டிக்கப்பட்டவர்கள் 214. இவ்வாறு, 10 சதவீதத்துக்கும் கீழான குற்றவாளிகள்தான் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை கொடுக்க வேண்டும். இதற்காக, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, மகிளா நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. எனவே, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தர சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுதொடர்பாக, குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் அ.தேவநேயன் கூறியதாவது: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அரசு வழக்கறிஞர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். வழக்கு மட்டும் பதிவு செய்யாமல் தொடர்ந்து கண்காணித்து விரைந்து நீதி வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கவுன்சலிங், நிவாரண தொகை, பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் போக்சோ சட்டம் அமலாக்கப்பட்டதில் இருந்து செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புக்கான மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நல காவலர்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவிடம் கேட்டபோது, ‘‘இருக்கிற நீதிமன்றத்துக்கே சிறப்பு நீதிமன்றத்துக்கான அதிகாரத்தை அளித்து விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் போக்சோ சட்டத்தின் கீழ் விசாரிக்கும் நீதிபதிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நட்பு ரீதியான சுற்றுப்புற சூழல் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் குற்றவாளிகளை பார்க்காத வகையில் தனி வழி ஏற்படுத்துவது, குழந்தைகளை திரைக்கு பின்பு அமர வைப்பது, தெரிந்தவர்களை உடன் இருக்க அனுமதிப்பது உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுடன் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பாதிக்கப்படும் குழந்தைகள் பயப்படும் அளவுக்குதான் தற்போதைய கட்டமைப்புகள் உள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT