Published : 11 May 2019 08:30 AM
Last Updated : 11 May 2019 08:30 AM
நாமக்கல் என்றால் முட்டை, லாரி, ஆஞ்சநேயர் கோயிலுடன், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையும் நினைவுக்கு வரும்.
ஒரே கல்லால் உருவான இந்த மலை, 246 அடி உயரம் கொண்டது. இந்த மலை உருவானது தொடர்பாக சுவாரஸ்ய கதையும் உண்டு. விஷ்ணுவுக்கு உகந்த சாலக்கிராமத்தை இவ்வழியே அனுமன் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, கமலாலயக் குளத்தில் நீராடுவதற்காக அதை கீழே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். நீராடிய பின், தொடர்ந்து முயற்சித்தும் சாலக்கிராமத்தை எடுக்க இயலவில்லை. இதனால், சாலக்கிராமத்தை அங்கேயே வைத்துவிட்டு, ஆஞ்சநேயரும் தங்கி விட்டார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாமக்கல் கோட்டையில் நரசிம்மர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி எதிரே அனுமன் கோயிலும் உள்ளது.
இந்த மலையை நாமகிரி என்றும் அழைக்கின்றனர். இதைக் கொண்டே இப்பகுதிக்கு நாமக்கல் என்று பெயர் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மலைக் கோட்டையின்மீது பெருமாள் கோயில் மற்றும் தர்கா உள்ளது. அந்த வகையில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் இது விளங்குகிறது.
இந்த நிலையில், மலைக்கோட்டைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளில் சிலர், அங்குள்ள சுவர்கள் மீது தங்களது பெயர் உள்ளிட்டவற்றை எழுதி, அதன் அழகை சிதைப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இதை கவனத்தில்கொண்டு, நாமக்கல் மலைக்கோட்டையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “நாமக்கல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மலைக் கோட்டையிலிருந்து நகரின் முழுத் தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம். மலையைச் சுற்றிலும் குளங்கள் உள்ளன. இவற்றை அண்மையில் அழகுபடுத்தியுள்ளனர். மலையின் ஒருபுறம் உள்ள குளத்தில், மாலை நேரத்தில் மலையின் முழு நிழலும் விழுவது காண்போரைக் கவர்கிறது.
இந்த மலை மீது 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, அதன் பொலிவு குன்றாமல் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. 16-ம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரரான ராமச்சந்திர நாயக்கரால் இக்கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதேசமயம், மைசூர் அரசு அதிகாரி லட்சுமி நரசய்யா இக்கோட்டையைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.
திப்பு சுல்தான் காலத்தில், வெள்ளையரை எதிர்த்துப் போராட இக்கோட்டையைப் பயன்படுத்தியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக கோட்டையின் ஒரு பகுதியில் ஆயுதக் கிடங்கு உள்ளது. இதேபோல், பாதுகாப்பு சுவர்களும் உள்ளன. இவற்றைக் காணச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கோட்டை சுவர்களின் மீது தங்களது பெயர்களை எழுதுவது, படங்களை வரைவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால், கோட்டையின் அழகு மாசுபடுவதுடன், கோட்டையும் சிதிலமடைகிறது. கோட்டையை பராமரிப்பு செய்யும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர்,
பணியாளர் ஒருவரை நிரந்தரமாக நியமித்து, கண்காணிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், கட்டணம் வசூலித்து கோட்டையை பார்வையிட அனுமதித்தால், கணிசமான வருவாயும் ஈட்ட முடியும்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, கோட்டையை பொலிவுபடுத்தவும் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் முன்வர வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT