Published : 09 May 2019 12:00 AM
Last Updated : 09 May 2019 12:00 AM
வருவாய் துறையின் நிரந்தர ஒருங்கிணைந்த சான்று பெறவும், புதுப்பிக்கவும் புதுச்சேரியில் பெற்றோர், மாணவர்கள் கடும் அலைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். தாசில்தார் அலுவலகங்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. புதுச்சேரியில் ஆண்டுதோறும் நடப்பதுபோல், இந்த ஆண்டும் பெற்றோர், மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சிறப்பு முகாமுக்கு கூட ஏற்பாடு செய்யாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், அதனைத் தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பிளஸ் 2 மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் பிளஸ் 1 சேருவதற்கும் ஒருங்கிணைந்த சான்றிதழை புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ் தரப்படுகிறது. மாணவரின் புகைப்படம், சாதி சான்று, இருப்பிடச் சான்று, மாணவரின் தந்தையின் வருமான சான்று, குடியுரிமை ஆகியவை ஒரே சான்றிதழில் இடம் பெற்றிருக்கும். இதை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
11ம் வகுப்பு, கல்லூரி, உயர் கல்வி படிக்க செல்லும்போது இச்சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது இச்சான்று பெறுவதில் மக்கள் பல கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இந்தச் சான்றிதழைப் பெறபுதுச்சேரியில் தாசில்தார் அலுவலகங்களில் பெற்றோர்,மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக் கின்றனர். அங்கு பணியாற்றுவோர் இதை வழக்கமானது என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், ஆண்டு தோறும் இப்பிரச்சினை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முன்பெல்லாம் விஏஓ, வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோர் இணைந்து சான்றிதழ் தர முகாம் ஏற்பாடு செய்வார்கள். இம்முறை செய்யவில்லை.
அரசு அலுவலகங்களில் சான்றிழ் கேட்டு ஏராளமானோர் வெயிலில் வரிசையில் காத்திருக்கின்றனர். குடிநீர் உட்பட எவ்வித வசதியும் இல்லாமல் தவிக்கின்றனர்.
வரிசையில் காத்திருக்கும் பெற்றோர் கூறுகையில், "ஒருங்கிணைந்த சான்றிதழை புதுப்பிக்க வந்தால், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, பிறப்பு சான்று, பள்ளி, கல்லூரி படிப்புச்சான்று, பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்று என வரிசையாக கேட்டு அலைக்கழிக்கிறார்கள். புதுப்பிக்கும் சான்றை விஏஓ, வருவாய் ஆய்வாளர் சரிபார்த்து, தாசில்தாரிடம் சென்று பெற வேண்டியுள்ளது. ஒரே இடத்தில் முகாம் நடத்தினால் பணிக்கு விடுப்பு எடுத்து அலைவது குறையும். ஏற்கெனவே சான்று இருந்தாலும் அதைகணக்கில் கொள்ளாமல் குழப்புகிறார்கள். அரசு இதைக்கூட கண்டுகொள்ளாமல் இருக்கிறது." என்று குற்றம்சாட்டுகின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டால், "மருத்துவம், பொறியியல் படிப்போருக்கு கல்வித்தொகை, இதர மாநிலத்தவர் போலிச் சான்று தருவதாக வரும் புகார் என பிரச்சினைகள் உள்ளன. சான்றுகள் சரியாக இருந்தால்தான் எங்களால் அனுமதிக்க முடியும். சிறப்பு முகாம் நடத்த அதிகாரிகளோ, அரசோ தெரிவித்தால்தான் எங்களால் செய்ய முடியும். நாங்களாக நடத்த இயலாது" என்று குறிப்பிடுகின்றனர். இதுதொடர்பாக ஆட்சியரை தொடர்பு கொள்ளவே முடிய வில்லை. தேர்தல் நன்னடத்தை விதிகளை அங்குள்ளோர் சுட்டிக்காட்டி நழுவுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT