Published : 14 May 2019 12:00 AM
Last Updated : 14 May 2019 12:00 AM

ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரை புவி வெப்பமயமாதலால் அழியும் கடல் புற்கள்

புவி வெப்பமயமாதலால் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் காணப்படும் அரியவகை கடல் புற்கள் அழிந்து வருகின்றன.

ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி வரை கடற்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம், தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் என்ற பெருமையைக் கொண்டது.

560 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தில் கோரி தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு, பூமரிச்சான் தீவு, மனோலி தீவு, மனோலி புட்டி தீவு, முயல் தீவு, முள்ளி தீவு, வாழை தீவு, தலையாரி தீவு, பூவரசன் பட்டி தீவு, அப்பா தீவு, வாலி முனை தீவு, ஆனையப்பர் தீவு, நல்லதண்ணி தீவு, புலுவினி சல்லி தீவு, உப்புத் தண்ணி தீவு, விலங்கு சல்லி தீவு, காரைச்சல்லி தீவு, காசுவார் தீவு, வான் தீவு என 21 தீவுகள் அமைந்துள்ளன.

அரியவகை கடல்வாழ் உயிரினங்கள்

இந்த 21 மன்னார் வளைகுடா தீவுகளைச் சுற்றிலும் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் வசிக்கின்றன. குறிப்பாகப் பாலூட்டிஇனங்களைச் சேர்ந்த ‘ஆவுளியா’ என்று அழைக்கப்படும் கடல் பசு, ‘ஓங்கில்’ என்று அழைக்கப்படும் டால்பின்கள் அதிகமாக இப்பகுதியில் காணப்படுகின்றன.

கடல் பசு, டால்பின், ஆமை, கடல் குதிரை உள்ளிட்டவை, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காணப்படக்கூடிய 13 வகையான கடல் புற்களை பிரதானமாக உண்ணும். மேலும் கடல் புற்களில் காணப்படும் நுண்ணுயிரிகள் மூலம் கடலின் சூழலியல் மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.

இதுகுறித்து ராமேசுவரம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் சார் நிலைய ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக். ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் 100 கி.மீ. பரப்பளவில் இருந்த கடல் புற்கள் தற்போது புவி வெப்பமயமாதல், கடலில் கொட்டப்படும் குப்பைகள், கடலில் கலக்கும் கழிவுநீர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட படகுகளாலும் கடற்கரைகளில் கடல் புற்கள் ஒதுங்கத் தொடங்குகின்றன. மேலும் வேறு ஏதேனும் காரணங்களாலும், கடல் புற்கள் அழிந்து வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x