Published : 30 May 2019 10:07 AM
Last Updated : 30 May 2019 10:07 AM
நூறு வயதைக் கடந்தும் உற்சாகமாய் இருக்கிறார் பி.பி.கே. எனப்படும் பி.பி.கந்தசாமி. இவர், பிரிட்டிஷ் ஆட்சியில் ராணுவ ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவர் என்பது கொஞ்சம் விசேஷமான தகவல்.
தனது 100-வது பிறந்த நாளை, 2 மகன்கள், 3 மகள்கள், பேரன் , பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ பல்லடத்தில் உற்சாகமாய் கொண்டாடினார் கந்தசாமி.
பல்லடம் அருகேயுள்ள பனப்பாளையத் தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, திண்ணைப் பள்ளியில் கொஞ்சம் கல்வி கற்றவர் பி.பி.கந்தசாமி. 1920 மே 29-ம் தேதி பிறந்த இவர், தந்தையுடன் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். பின்னர், வாகனம் ஓட்டப் பழகி, பிரிட்டிஷ்காரர்களின் ராணுவ ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராகப் பணியாற்றினார்.
சிறு வயது முதலே வாகனங்கள் மீது பிரியம் கொண்ட இவர், இப்போதும் சந்தையில் புதிதாக வரும் வாகனங்கள், அதில் உள்ள வசதிகள் குறித்து வாரிசுகளிடம் கேட்டுக்கொள்கிறார்.
1939-1945-ல் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், நான்கு ஆண்டுகள்ராணுவ கனரக வாகன ஓட்டுநராகவும் இந்திய- சீனா எல்லையில் பணிபுரிந்துள்ளார். பின்னர், சூலூர் விமானப்படை தளத்தில் பொறியியல் பிரிவுக்கு மாற்றலாகினார். அந்த சமயத்தில் கந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இந்த தம்பதியின் வாரிசுகள், ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் சாதித்து வருகின்றனர்.
ராணுவ சேவையை முடித்துவிட்டு, பல்லடத்தில் முதன்முதலாக வாடகைக் கார் சேவையைத் தொடங்கினார். அதேபோல, 1964-ல் பல்லடத்தில் இவர் இரு விசைத்தறிகளை நிறுவியதே, தற்போது பல்லடம் பகுதியில் இந்த அளவுக்கு விசைத்தறித் தொழில் வளரக் காரணம் என்கின்றனர்.
விவசாயத்துக்கு மாற்றாக விசைத்தறித் தொழிலை மேம்படுத்தி பலரையும் விவசாயம், விசைத்தறி என இரு குதிரைகளிலும் சவாரி செய்யச் செய்தார் கந்தசாமி என்று இவ்விழாவில் பலரும் பாராட்டினர். அதேபோல, விசைத்தறித் தொழிலாளர்களுக்கு லாபகரமான கூலியைப் பெற்றுத்தந்தது என பல நல்ல விஷயங்களை அவர் முன்னெடுத்துள்ளார்.
பிரேக் இல்லாத வண்டி!
கந்தசாமியின் பேரன் கார்த்திக் கூறும்போது, “தாத்தாவின் 100-வது பிறந்தநாளையொட்டி 100 மரக்கன்றுகளை நட்டோம். வாகனங்கள் மீது அலாதியான பிரியம் கொண்ட அவருக்கு, இதுவரை வாகனங்கள் மீதான காதல் குறையவே இல்லை. பழைய அம்பாசிடர் கார் பஞ்சரானால், ஜாக்கி உதவியின்றி, தன் கால்களாலேயே காரை தூக்கி நிறுத்தி, டயரை மாற்றும் வலுவான உடலைக் கொண்டிருந்தார். அதேபோல், வாகனங்களில் பிரேக் இல்லாமல், ஒரே கியருடன் உதகை மலைப் பாதையில் வாகனங்களை ஏற்றி சாதனைபுரிந்தவர்” என்றார்.
தானியம், காய்கறி, மீன் ஆகியவற்றைவிரும்பிச் சாப்பிடும் கந்தசாமி, மண் குளியல்வைத்தியம், ஆயுர்வேத மருத்துவ முறை மூலம் உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கிறார். நூற்றாண்டு விழா மலரைவெளியிட்ட அவரது வாரிசுகளை, வாழ்த்திமகிழ்ந்த கந்தசாமி, “நமக்குப் பிடித்தவிஷயத்துடன் பயணிப்பதே, மனதைமகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். அதுவே என் ஆரோக்கியத்தின் ரகசியம்” என்றார் கந்தசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT