Published : 27 May 2019 09:01 AM
Last Updated : 27 May 2019 09:01 AM

தேசத்தை கட்டமைக்கும் லட்சியவாதி!- ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கும் கோவை பேராசிரியர் கனகராஜ்

நாட்டை ஆள்வது அரசியல்வாதிகள் என்றாலும்,தேசத்தை கட்டமைப்பதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயரதிகாரிகளின் பங்கு முக்கியமானது. தேசத்தை நிர்வகிப்பதில், திட்டங்களைச் செயல்படுத்துவதில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் பங்களிக்கும் அதிகாரிகள், மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை உயர்ந்தபட்ச படிப்பான ஐ.ஏ.எஸ். படிக்க  வேண்டுமென்பது லட்சக்கணக்கானோரின் கனவு. எல்.கே.ஜி. படிக்கவே லட்சக்கணக்கில் செலவளிக்க வேண்டிய இக்காலத்தில், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஒரு பைசா வாங்காமல் பயிற்சி அளிக்கிறார் பேராசிரியர் பி.கனகராஜ்(49).

கோவை அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர், கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரை சந்தித்தபோது, கொஞ்சம் தயக்கத்துக்குப் பிறகு பேசத் தொடங்கினார்.

“தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவாடிப்பட்டி என்ற குக்கிராமம்தான் எனது பூர்வீகம். பெற்றோர் பிச்சைவேல்-சரோஜா. விவசாயக் குடும்பம். அப்பா ஊராட்சித் தலைவராக இருந்தவர். தஞ்சாவூரில் பள்ளிக் கல்வியை முடித்தேன். படிக்கும்போது டாக்டராக வேண்டுமென்பதே விருப்பம். ஆனால், மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இதனால், ஐ.ஏ.எஸ். படிக்கத் திட்டமிட்டேன்.  சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தேன். தொடர்ந்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. அரசியல் அறிவியல் முடித்து, அங்கேயே எம்.பில்., பி.ஹெச்டி.யும் முடித்தேன்.

கருகியது ஐ.ஏ.எஸ். கனவு!

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயாரானேன். எனினும், நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. 1998-ல் கல்லூரி ஆசிரியர் பணிக்கான தேர்வில் (டி.ஆர்.பி.) வென்று, கோவை அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் விரிவுரையாளராகப் பணிக்குச் சேர்ந்தேன். அந்த தேர்வில் அரசியல் அறிவியல் பிரிவில் மாநிலத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்றேன்.

2001-ல் திருமணம். மனைவி வெண்ணிலா. கோவை வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.

பொதுவாகவே, எனக்கு ஆசிரியப் பணி மிகவும் பிடித்தமானது. கல்லூரியில் செமினார் வகுப்புகளை நடத்தும்போதே, புத்தகத்தைப் பார்த்து வாசிக்காமல், ஏற்கெனவே தயாராகிவந்து, சரளமாகப் பாடம் நடத்துவேன். இவ்வாறு, இயற்கையாகவே ஆசிரியப் பணி மனதுக்கு உகந்ததாக இருந்தது.

இந்த நிலையில், 2004-ல் டெல்லியில் ஐ.ஏ.எஸ். படிக்கச் சென்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, கோவை வந்து என்னை சந்தித்தனர். அரசியல் அறிவியல் பாடத்தில் தங்களுக்கிருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யுமாறும், வகுப்பு நடத்துமாறும் கேட்டுக்கொண்டனர். அவர்களை எனது வீட்டுக்கே வரவழைத்து, பாடம் நடத்தினேன். மேலும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் வழிகாட்டினேன். என்னிடம் படித்த மாணவர்கள் இருவர் 2008-ல் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் அஜிதா பேகம். அவர் தென்னிந்தியாவிலேயே ஐ.பி.எஸ். தேர்வில் வென்ற முதல் முஸ்லிம் பெண். இது எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.

திசையை மாற்றிய நிகழ்வு...

இதற்கு முன்பு, நான் நிறைய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன். சர்வதேச ஆராய்ச்சி இதழ்கள், நாளிதழ்கள், பருவ இதழ்களில் சுற்றுச்சூழல் அரசியல், மக்களாட்சி அரசியல் தொடர்பான எனது கட்டுரைகள் வெளியாகின. மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அரசியல் அறிவியல் தொடர்பாக உரையாற்றினேன். காவல் துறையினருக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தினேன். வெளிநாடுகளில் கல்வித் துறையில் பணிபுரிய வேண்டும், ஆராய்ச்சிகள் செய்ய வேண்டுமென்பதே அப்போது விருப்பமாக இருந்தது. இந்த நிலையில், என்னிடம் படித்த இருவர் ஐ.ஏ.எஸ்.  தேர்ச்சி பெற்றது தொடர்பாக `இந்து’ ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளியானது. இதையடுத்து, நிறைய மாணவர்கள் என்னைத் தேடி வந்தனர்.

இது, எனது வாழ்வின் லட்சியத்தை மாற்றியது. வெளிநாட்டு மாணவர்களுக்குக் கற்பிப்பதைக் காட்டிலும், இந்திய மாணவர்களுக்கு நேரடியாக கல்வி கற்பிக்க வேண்டும் என்று கருதினேன். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தத் தொடங்கினேன். மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், எனது வீடு போதுமானதாக இல்லை. இதனால், அரசு கலைக் கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையில், மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்தினேன். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எனது நண்பர்களான ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரும் வந்து, பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள். அவர்கள் பயிற்சி வகுப்பு நடத்த போதுமான இடத்தை ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள்.

உதவிய கோவை மாநகராட்சி!

அந்த சமயத்தில், மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு `வாழ்வுக்கு திறனேற்றுதல்’ பயிற்சி அளித்தேன். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்தெல்லாம் விளக்கினேன். அப்போதைய மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா என்னை அழைத்து, `பள்ளிக் குழந்தைகளுக்கும், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கும் இலவசமாகவே பயிற்சி வகுப்புகளை நடத்துகிறீர்கள். உங்களுக்கு  உதவ மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மாநகராட்சி யின் உயர் கல்வி மையத்தில், நீங்கள் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம்’ என்றார்.

88 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்!

இப்படித்தான் 2011-ல் கோவை நஞ்சப்பா சாலையில் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் உருவானது. தற்போது இங்கு 400-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்றுள்ளனர். மொத்தம் 88 மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வென்று, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், டெல்லி, மேற்குவங்கம், மணிப்பூர், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல, டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வு, ஆசிரியர் தேர்வு என பல்வேறு போட்டித் தேர்வுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்று, அரசுத் துறைகளில் பொறுப்பு வகிக்கின்றனர்.

ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது கடலில் நீந்தப் பழகுவது. அதில் பழகிவிட்டால், வாய்க்கால், குளத்தில் எளிதில் நீந்தலாம். அதுபோல, ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகுபவர்கள், மற்றத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எளிதாகும்.

இந்த மையத்தில் பொது அறிவு, அரசியல் அறிவியல், நேர்காணல் ஆகியவற்றுக்குத் தயாராவது தொடர்பான  பயிற்சிகளை நடத்துகிறோம். முன்பெல்லாம் கோவையைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு பயிற்சி பெற வருவார்கள். தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்கூட மாணவர்கள் வந்து, பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். நான் வகுப்புகளை நடத்துவதுடன், என்னிடம் பயிற்சி பெறும் சில மாணவர்களைக் கொண்டும் வகுப்புகளை நடத்துகிறேன்.

10 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே...

மொத்தம் 3 வகையான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒன்று, ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் வகுப்பு நடத்துகிறேன். கடந்த 11 ஆண்டுகளில் 10 ஞாயிற்றுக்கிழமைகள்தான் நான் பாடம் நடத்தாத நாட்கள். வெளியூர் சென்றிருந்தால் கூட, ஞாயிற்றுக்கிழமைக்கு மையத்துக்கு வந்துவிடுவேன். நெருங்கிய உறவினர் திருமணம், துக்க நிகழ்ச்சி என தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளில் மட்டும்தான் விடுமுறை எடுத்துள்ளேன்.

இதேபோல, ஜூன் முதல் அக்டோபர் வரை அரசியல் அறிவியல் வகுப்புகளும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேர்முகத் தேர்வுக்கான வகுப்புகளும் நடத்துவேன். இப்போது 400 பேர் பயில்கிறார்கள். போதிய இடமில்லாததால் மிகுந்த சிரமத்துக்கிடையில்தான் வகுப்புகள் நடக்கின்றன. இடவசதி இருந்தால் 2,000 பேர் வரை பயிற்சி வகுப்புக்கு வரத் தயாராக இருக்கிறார்கள்.

100 பேருக்கு இலவச பயிற்சி!

இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் 100 பேருக்கு, இலவசமாக தங்குமிடம், உணவு கொடுத்து, ஐ.ஏ.எஸ். பயிற்சிமையம் நடத்த வேண்டுமென்பதே எனது லட்சியம். இதற்காக ஒரு கட்டிடம் கட்ட முயற்சித்து வருகிறேன். நண்பர்கள் கங்கா அறக்கட்டளை செந்தில்குமார், சென்னை சில்க்ஸ் சந்திரன், ஸ்ருதி அறக்கட்டளை ராஜேந்திரன், வருவாய்த் துறை அதிகாரி டாக்டர் கார்த்திக், விஜயலட்சுமி அறக்கட்டளை ஓ.ஆறுமுகசாமி ஆகியோர் உதவ முன்வந்துள்ளனர்.  நன்றாகப் படிக்கும், வசதியில்லாத குழந்தைகளுக்கு இந்த மையம் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

என்னிடம் படித்து, வெற்றி பெற்ற மாணவர்கள், ‘சார், ஒரு பைசாகூட வாங்காமல் கற்றுக் கொடுத்து, வெற்றி பெற வைத்துள்ளீர்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்பார்கள். ‘எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால்,  நீங்கள் அதிகாரியான பிறகு, ஏழை மக்களுக்கு உதவுங்கள். உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதுபோல, பிறரது வாழ்வில் மாற்றத்தை உண்டாக்க உதவுங்கள்’ என்று கேட்டுக் கொள்கிறேன். எனது தேவை மிகக் குறைவு. நானும், மனைவியும் சம்பாதிப்பது எங்கள் குடும்பம் நடத்தப் போதுமானது.  சமூக மேம்பாடே என் லட்சியம்.

இதற்காக, நானும், எனது மாணவர்களும் சேர்ந்து ‘தேச லட்சியம் அறக்கட்டளை’ என்ற அமைப்பை நடத்துகிறோம். வருங்காலத் தலைமுறையான குழந்தைகளின் திறமை, அறிவை மேம்படுத்துதல், ஆளுமைத் திறன், தலைமைப் பண்பை வளர்த்தல் ஆகியவையே இதன் லட்சியம். தற்போது உலகில் இளைஞர்களின் தலைநகரமாகத் திகழ்கிறது இந்தியா. ஏறத்தாழ 70 கோடி இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அறிவை, திறனை, மனப்பக்குவத்தைக் கொடுத்தால், இந்தியா சிறந்த நாடாக உருவாகும்.

என் லட்சியத்தை அடைய மனைவியும், குழந்தைகள் பிரிகேஷ், தேஜா ஆகியோர் பெரிதும் ஒத்துழைக்கின்றனர்.

படைப்பாற்றல் ஊக்குவிப்பு!

நான் பணிபுரியும் கோவை அரசு கலைக் கல்லூரியில் பல மாணவர்கள் படைப்பாற்றல் திறன் மிக்கவர்களாக உள்ளனர். அவர்களது திறனை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஓராண்டாக குறும்படங்கள் வெளியிடுதல், ஓவியக் கண்காட்சி நடத்துதல் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறோம். அவர்களது திறனை வெளிக்கொணர்ந்து, வெற்றிபெற ஊக்குவிக்கிறோம்.

இதேபோல, மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டல் பயிற்சி வகுப்புகளையும் நடத்துகிறோம். நன்றாகப் படிக்கும் குழந்தைகள்கூட, சிறிய தோல்விக்குத் துவண்டு விடுகிறார்கள். சிலர் தவறான

முடிவுக்குக்கூட செல்கிறார்கள், பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல், மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். எனவே, சிந்திக்கும் திறனை மேம்படுத்தல், ஆழ்மனதுப் பயிற்சி தருகிறோம். மாணவர்கள், பெற்றோருக்கு தினமும் ஒரு மணி நேரமாவது கவுன்சிலிங் அளிக்கிறோம்.

நான், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராவது, வாழ்வுக்குத் திறனேற்றுதல், உயர்கல்வி-வேலைவாய்ப்பு விழிப்புணர்வு ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளேன். வேலைவாய்ப்பு விழிப்புணர்வுப் புத்தகத்தை 75,000 குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம்.

 இதுவரை 4.75 லட்சம் குழந்தைகள் மத்தியில் பேசியுள்ளேன். டெல்லி, இம்பால் ஹைதராபாத் போன்ற பல நகரங்களில், பயிற்சி வகுப்புகளும் நடத்தியுள்ளேன்.நூறு இளைஞர்களைக் கொடுங்கள், நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். அதுபோன்ற இளைஞர்களை தயார் செய்வதே எனது லட்சியம்.

சிறந்த இளைஞர்கள் உருவாகினால், லட்சக்கணக்கானோருக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள். தேசத்தைக் கட்டமைப்பவர்களை உருவாக்குவதே எனது லட்சியம். இளைஞர்களுக்கு நான் சொல்வதெல்லாம், ‘நீங்கள் முனிவராக இருக்க வேண்டும். நன்றாக வாழுங்கள். அதேசமயம், மற்றவர்களையும் கைதூக்கிவிடுங்கள்’ என்பதுதான்.

நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானது. எனது குடும்பத்தினருடன் செலவிடவும் தேவையான நேரத்தை ஒதுக்குகிறேன். மேலும், கற்றுக் கொடுப்பதுதான் எனக்கு விருப்பமும், பொழுதுபோக்கும். அதுவே லட்சியமாகவும் இருப்பதால், எதையும் நான் சுமையாக உணரவில்லை” என்றார் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் கனகராஜ்.

தினமும் ‘இந்து’ நாளிதழ் படியுங்கள்...

தற்போது ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றுகனகராஜிடம் கேட்டோம். “சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஓர் அதிகாரியிடம், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெல்ல என்ன செய்ய வேண்டுமென கேட்டேன். தினமும் `இந்து’ ஆங்கிலம் செய்தித்தாள் வாசியுங்கள் என்றார். இப்போது தேர்வுக்குத் தயாராகும் இளைஞர் களிடம், தினமும் `இந்து ஆங்கிலம்’, `இந்து தமிழ்’ நாளிதழ்களைப் படியுங்கள் என்கிறேன். அதேபோல, அரை மணிநேரமாவது ஆங்கில செய்திசேனலைப் பாருங்கள். படிப்பவற்றைப்புரிந்து படியுங்கள். போட்டித் தேர்வில் பொது அறிவு கேள்விகள்தான் அதிகம் உள்ளன. அவை பாடப் புத்தகங்களில் இருப்பவைதான்.

அதேபோல, சரியான வழிகாட்டுதல்களும் அவசியம். ஒரு பாடத்துக்கு ஒரு புத்தகத்தை மட்டும் படியுங்கள். பல புத்தகங்களைப் படித்தால், குழம்பி விடுவீர்கள். புரியாமல் படிப்பதால் எவ்விதப் பயனும் இல்லை. தற்போது போட்டி அதிகமாகிவிட்டது.

தோல்வியடைய வாய்ப்புகள் அதிகம். எனவே, முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்காவிட்டால், துவண்டுவிடக் கூடாது. மனதைப் போல, உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். பல மணி நேரம் உட்கார்ந்துகொண்டே படிப்பதால், உரிய நேரத்தில் ஓய்வெடுப்பதும், நடைப்பயிற்சியும்அவசியம்.ஐ.ஏ.எஸ். தேர்வைப் பொறுத்தவரை, மொழி முக்கியம் அல்ல. அறிவும், திறனும்தான் அவசியம். காமராஜர் முயற்சியில், தமிழிலும்ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுகிறோம். இப்போதெல்லாம், மொழி பெயர்ப்பாளர் உதவியுடன், நேர்முகத் தேர்வைக்கூட தமிழில்மேற்கொள்ளலாம். அதேசமயம், ஆங்கில மொழியறிவு அவசியம். பிரதானத் தேர்வில் பொது ஆங்கிலம் என்று ஒரு தாள் உள்ளது. அதில், தேர்ச்சி பெற வேண்டும். மேலும், நாடு முழுவதும் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளதால், தகவல்தொடர்புக்காகவாவது

ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, ஒவ்வொரு நாளும் வாசிப்பதும், மேம்படுத்திக் கொள்வதும் அவசியம். பயிற்சி, முயற்சி, தொடர்ச்சி இருந்தால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி என்பது எட்டும் கனிதான்.

2,000-ம் ஆண்டு முதல் 2016 வரை நாட்டிலேயே அதிக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கியது தமிழகம்தான். 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் தமிழர்களாக உள்ளனர். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இதில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். தற்போது தமிழக அரசு, பாடப் புத்தகங்களின் தரத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக  உயர்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு உதவும் முயற்சிகளை மேற்

கொண்டுள்ளதும்   பாராட்டுக்குரியது”  என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x