Published : 22 May 2019 03:52 PM
Last Updated : 22 May 2019 03:52 PM
வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை (மே 23) தேனியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேனி மக்களவை மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் இடைத்தேர்தல் வாக்கு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டி கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தில் தேனி மக்களவை வாக்குகளை எண்ண 6 அறைகளும், தபால் வாக்கிற்கு ஒரு அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் இரண்டு சட்டசபைக்கு தனித்தனியே 2 அறைகளும், இத்தொகுதி தபால் வாக்குகளுக்கு இரண்டு அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணத் துவங்கியதும் அரை மணி நேரம் கழித்து இயந்திரத்தில் பதிவான ஒட்டுக்கள் கணக்கிடப்படும்.
ஆண்டிபட்டி, சோழவந்தான், போடி உள்ளிட்ட தொகுதியில் தலா 23 சுற்றுகள் எண்ண வேண்டிய நிலை உள்ளது. இதே போல் பெரியகுளம், கம்பம் தொகுதியில் தலா 22 சுற்றும், உசிலம்பட்டியில் 18 சுற்றுகளிலும் வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாளை காலை 6 முணி முதல் இப்பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தேனியில் இருந்து அரண்மனைப்புதூர் வழியாக கொடுவிலார்பட்டி மெயின் ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் அரண்மனைப்புதூர், கோட்டைப்பட்டி, கொடுவிலார்பட்டி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போல் கண்டமனூரில் இருந்து தேனிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கொடுவிலார்பட்டி, வயல்பட்டி, வீரபாண்டி வழியாக தேனி செல்ல வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்திற்கு இருபுறமும் 100 மீட்டர்க்கு அப்பால் வாகனங்களை நிறுத்தப்படும்.
அரசு அலுவலர்கள் உட்பட யாரும் பேனா, மொபைல், வாட்டர்பாட்டில் மற்றும் எல்க்ட்ரானிக் டிவைஸ் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லக் கூடாது என்றும் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதி விஐபி அந்தஸ்து கொண்ட தொகுதியாக உள்ளது. இங்கு அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அமமுக சார்பில் தங்கத் தமிழ்ச் செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT