Last Updated : 31 May, 2019 03:13 PM

 

Published : 31 May 2019 03:13 PM
Last Updated : 31 May 2019 03:13 PM

சுட்டெரிக்கும் கோடை வெயில்: புதுச்சேரியில் ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறப்பு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி 3-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் கத்திரி வெயில் 29-ம் தேதி முடிந்தாலும் கூட தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பெற்றோர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சில கட்சியினர் வேண்டுகோளுக்கினங்க நானும், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனும் கலந்து ஆலோசித்து, ஏற்கெனவே ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளோம்.

இது அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். கண்டிப்பாக ஜூன் 10-ம் தேதி பள்ளிகள் நடைபெறும். பள்ளி கல்வித்துறை சார்பில் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். பள்ளி மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கடந்த 3 ஆண்டுகளாக எங்கள் ஆட்சியில் மத்திய அரசின் திட்டங்களை முறையாக நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசின் பல துறைகளை அணுகி மக்கள் நலத்திட்டங்களை பெற்றுள்ளோம்.

இப்போது பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்ற பிறகு எல்லா மாநில வளர்ச்சிக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளார். ஆகவே அதனை கருத்தில் கொண்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து மாநில வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு, அவர்கள் தேவையான நிதியை ஒதுக்கவும், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது எங்களின் முதன்மையான கோரிக்கை. இது சம்மந்தமாக ஏற்கெனவே கூட்டணி கட்சியினருடன் டெல்லிக்கு சென்று எங்களின் கருத்தை பதிவு செய்தோம். தொடர்ந்து அதனை வலியுறுத்துவோம். மேலும் மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்துக்கு கொடுக்க வேண்டிய நிதி, 7-வது சம்பள கமிஷனை நாம் நிறைவேற்றியதற்கான நிதி, மானியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டியது, ஏற்கெனவே வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், புதுச்சேரி அரசுக்கு 90 சதவீத மானியம், மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றும், நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கும் மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவோம்" என்றார்.

அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கிரண்பேடியை மாற்றுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும். நாங்கள் முடிவு செய்ய முடியாது, என்றார். பேட்டியின்போது கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன், கல்வித்துறை செயலர் அன்பரசு உள்ளிட்டோர் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x