Last Updated : 04 May, 2019 12:00 AM

 

Published : 04 May 2019 12:00 AM
Last Updated : 04 May 2019 12:00 AM

கத்திரி வெயில் இன்று தொடக்கம்: கொளுத்தும் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுரை

கத்திரி வெயில் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை 26 நாட்கள் நீடிக்கிறது.

ஆண்டுதோறும் மே மாதம் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இருப்பினும், இந்த ஆண்டு அக்னிநட்சத்திரத்துக்கு முன்னதாகவே வாட்டி வதக்கிய வெயிலால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி முதல் படிப்படியாக வெயில் தாக்கம் அதிகரித்து, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெயிலின் அளவு பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பாகவே நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 112 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல, மாநிலம் முழுவதும் வெயிலின் அளவு அதிகப்படியாக இருந்தது.

இந்நிலையில் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை 26 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வெயில் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம்.

இதுகுறித்து சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக் கல்லூரி கண்காணிப்பாளரும், பொது அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி.வி.தனபாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:பொதுவாக அக்னிநட்சத்திரம் காலத்தில் உஷ்ண நிலை அதிகரித்து, சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் நம் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் நாளொன்றுக்கு நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். தர்பூசணி, நுங்கு, இளநீர், எலுமிச்சை உள்ளிட்ட இயற்கை பழரசங்களை அருந்த வேண்டும். செயற்கை பானங்களை தவிர்ப்பது நலம்.

ஆடைகள் தளர்வாகவும், பருத்தி துணி வகையை அணிவதும் சிறந்தது. பகலில் வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக குடை, கைக்குட்டை உள்ளிட்டவை மூலம் வெயில் தாக்கத்தை தற்காத்துக் கொள்ள பயன்படுத்துவது அவசியம். இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை அக்னிநட்சத்திர காலங்களில் தவிர்த்து விட்டு, இட்லி, தோசை, கம்பு, களி உள்ளிட்ட சிறுதானிய உணவுகளை அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

அக்னிநட்சத்திரத்தின் போது சூரியனில் இருந்து புற ஊதா கதிர்வீச்சு நேரடியாக தோலை பாதிப்பதால், வெயில் கட்டி சிலருக்கு தோன்ற வாய்ப்புள்ளது. எனவே, அதிகப்படியான எண்ணெய் பதார்த்தங்களையும், துரித உணவு வகையையும் தவிர்த்து, உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை சார்ந்த உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கண் எரிச்சல், தலைவலி, வியர்கூறு வருவதை தடுத்திட காலை, மாலையில் குளிர்ந்த நீரில் குளித்து, பொதுமக்கள் அக்னிநட்சத்திர வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x