Last Updated : 07 May, 2019 12:00 AM

 

Published : 07 May 2019 12:00 AM
Last Updated : 07 May 2019 12:00 AM

வீராணம் ஏரியில் ஜூலை முதல் காவிரி நீரை நிரப்ப அனுமதி: நவம்பர் வரை சென்னைக்கு குடிநீர் கிடைக்க வாய்ப்பு

வீராணம் ஏரியில் ஜூலை முதல் வாரம் காவிரி நீரை மீண்டும் நிரப்ப அரசு அனுமதி அளித்துள்ளதால், வரும் நவம்பர் மாதம் வரை சென்னைக்கு வீராணம் தண்ணீர் கிடைக்கும் என்று குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் 16 கி.மீ. சுற்றளவில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி தண்ணீர் சென்னை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2004-ம் ஆண்டு முதல் வீராணம் தண்ணீர் சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கனஅடி. நேற்றைய (மே 6) நிலவரப்படி 1,146 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும்போது காவிரி நீர் வீராணம் ஏரிக்குத் திருப்பி விடப்படும். அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், 343-வது கி.மீ. தொலைவில் சேத்தியாதோப்பில் அமைந்துள்ள வீராணம் ஏரிக்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள வடக்குத்து என்ற இடத்தில் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இக்குழாயின் வழியாக அதிகபட்சமாக 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் அனுப்ப முடியும். குழாய் மூலம் போரூர் வந்து சேரும் வீராணம் தண்ணீரை சென்னையின் எந்தப் பகுதிக்கும் அனுப்பும் வசதி உள்ளது.

1,200 மில்லியன் லிட்டர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் மொத்த குடிநீர் தேவை 1,200 மில்லியன் லிட்டர். 2016-ம் ஆண்டு டிசம்பர் வரை தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. சென்னையில் மழைநீர் சேகரிப்பால் வீடுகளில் உள்ள கிணறுகள் மூலம் கிடைக்கும் நீர், நிலத்தடி நீர் போன்றவற்றின் மூலம் மீதமுள்ள குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான், வரும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தினமும் 500 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது: வீராணம் ஏரியில் தற்போதுள்ள தண்ணீரை வரும் ஜூன் மாதம் வரை சென்னை குடிநீர் தேவைக்காக அனுப்பலாம். அதன்பிறகு வீராணம் ஏரியில் மீண்டும் காவிரி நீரை நிரப்பினால்தான் சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் வழங்க முடியும். அவ்வாறு நிரப்பினால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை குடிநீர் தர இயலும். தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதை முன்வைத்தோம். பொதுப்பணித் துறை ஒப்புதல்இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தலைமைச் செயலாளர் கேட்டதற்கு, அவர்கள் தண்ணீர் தரலாம் என்றனர். அதன்படி, மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் காவிரி நீர் ஜூலை முதல் வாரத்தில் வீராணம் ஏரியில் நிரப்பப்படும். அந்தத் தண்ணீரை வடகிழக்கு பருவமழைக் காலமான நவம்பர் வரை பயன்படுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x