Published : 25 May 2019 10:04 AM
Last Updated : 25 May 2019 10:04 AM
சுற்றுச்சூழலைப் பற்றி நாம் செயல்படுவதைவிட, பேசுவதே அதிகம். காடுகளைக் காப்பாற்ற நம்மிடம் கொள்கையோ திட்டமோ இல்லை. செக்போஸ்டுகள் மட்டுமே இருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கென தனித் துறை அவசியம்” என்கிறார் `காட்டுயிர்’ காதலர் ச.முகமது அலி(55).
1980-லிருந்து மிகுந்த சிரமத்துக்கிடையிலும் `காட்டுயிர்’ என்ற மாத இதழை நடத்தி வரும் முகமது அலிக்கு, இயற்கை, வனம், சூழல் பாதுகாப்பு, விலங்குகள், பிராணிகள் நலனே சுவாசம் போன்றது.
காட்டுயிர் அன்பர் கழகத்தின் அமைப்பாளர், இயற்கை வரலாறு அறக்கட்டளை அமைப்புச் செயலர், வன உயிர் வாரிய நியமன உறுப்பினர்கள், திண்டுக்கல் இயற்கை வரலாற்றுக் கழக கவுரவத் தலைவர், சர்வதேச காட்டுயிர் நிதி அமைப்பின் நியமன உறுப்பினர் என பல்வேறு அமைப்புகளின் நிர்வாகி, மேட்டுப்பாளையம் வெளிமான், பெருநாகம், யூரோப்பியன் பீ ஈட்டர் போன்றவற்றைக் கண்டறிந்தவர், ஓவியர், நூலாசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகங்கள் கொண்ட முகமது அலியை மேட்டுப்பாளையத்தில் சந்தித்தோம்.
“பூர்வீகம் தாராபுரம். பெற்றோர் என்.எம்.ஷெரீப்-மகபூபுனிசா. 1945-ல் ஊரில் பிளேக், காலரா நோய்த்தொற்று காரணமாக குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்துக்கு இடம்பெயர்ந்தார் அப்பா. மேட்டுப்பாளையத்தில் பிளஸ் 2 முடித்துவிட்டு, பி.என்.பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயாவில் பி.ஏ. வரலாறு படித்தேன்.
வனத்தின் மீது அப்பாவுக்கு இருந்த காதல், என்னையும் தொற்றிக்கொண்டது. 18 வயதிலேயே வனம், விலங்குகள், பறவைகள் தொடர்பான தேடல் தொடங்கியது. சோவியத் புத்தக கண்காட்சியில் கிடைத்த நேர்த்தியான, அழகான புத்தகங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தின. அங்கு கிடைத்த இயற்கை விஞ்ஞானியின் கதைகள் என்ற ருஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகம், பறவைகள், விலங்குகள் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல்வேறு நூல்களை வாசித்தேன். அப்போதுதான் டாக்டர் சலீம் அலியைப் பற்றிப் படித்தேன். இதேபோல, உலகப் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரர்கள் கென்னத் ஆண்டர்சன், ஜிம் கார்ப்பெட் ஆகியோரது புத்தகங்கள், தென்னிந்திய காடுகள் மீதான பிடிப்பை ஏற்படுத்தின. மேலும், துப்பாக்கி உரிமம் வாங்கவும் தூண்டியது. ரூ.600 விலையில் ஒரு வேட்டைத் துப்பாக்கியும் வாங்கினேன். புறா, வாத்து, கொக்கு என 20-க்கும் குறைவான பறவைகளை சுட்டிருப்பேன்.
ஆனால், திடீரென என்னுள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் காடுகள் என்றாலே வேட்டை, புகைப்படமெடுத்தல் மட்டுமே பிரதானமாக இருக்கும். பாதுகாப்பு தொடர்பான கருத்துகள் பிரபலமாகவில்லை. பறவைகளை சுடுவதால் என்ன கிடைக்கப் போகிறது, எவ்வளவு கேவலமான செயல் இது என்று உணரத் தொடங்கினேன். வேட்டையை விடுத்து, விலங்குகள், பறவைகள் குறித்த விவரங்களை அறியத் தொடங்கினேன். நண்பர்களுடன் விவாதித்ததில், பல முரண்பாடுகள் தெரியவந்தன. புலிகள், யானைகள் தொடர்பாக பல கட்டுக்கதைகள் உலவின. அறிவியல் சார்ந்த கருத்துகளுக்குப் பதிலாக, புனைவுக் கதைகளே மிகுந்திருந்தன. உண்மையைத் தேட, ஏராளமான புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றியலைந்தேன். இது, பல கற்பனைக் கதைகளையும், அறியாமைகளையும் உடைத்தெறிந்தது.
வன விலங்கு அன்பர்கள் சங்கம்!
வனம், விலங்குகள், பறவைகள் தொடர்பான உண்மைகளை விளக்கவும், அல்லது மற்றவர்களுக்குத் தெரிந்த உண்மைகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. 1975-ல் மேட்டுப்பாளையத்தில் வன விலங்கு அன்பர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினேன். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லை. சில நண்பர்கள் எனக்காக அமைப்பில் இணைந்தனர். ஆனாலும், வேட்டையின் மீதும், சாகசம் மீதும்தான் பலருக்கும் ஆர்வம் இருந்ததே தவிர, உண்மையைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லை.
இது எனக்கு மிகுந்த வேதனையை, வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, உண்மைக் கருத்துகளை வெளிப்படுத்த ஒரு புத்தகம் வெளியிடலாமே என முடிவெடுத்தேன். முதல்கட்டமாக ஒரு தகவல் இதழ் ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக 1979-ல் `காட்டுயிர்’ என்ற மாத இதழ் தொடங்கினேன். அப்போதும் எனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. தொடர்ந்து நிறைய புத்தகங்களைப் படித்தேன். அப்பா எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். 1981-ல் தியோடர் பாஸ்கரன் குறித்து நாளிதழில் படித்தேன். எதேச்சையாக, கோவையில் அஞ்சல் துறையில் அவர் பணியாற்றுவதை அறிந்தேன். தேடுதலுக்குப் பிறகு அவரைக் கண்டேன். எனது கருத்துகளை, ஆர்வத்தை மிகவும் பாராட்டிய அவர், நட்பாக்கிக் கொண்டார். இதுவரை அந்த நட்பு தொடர்கிறது.
பறவை மனிதர் சலீம் அலி!
1988-ல் திருமணம். மனைவி பவுசியா. மகன்கள் அருள், இளவேனில். புத்தக வியாபாரத்தில் ஈடுபட்டேன். அந்த சமயத்தில், மும்பை இயற்கை வரலாற்றுச் சங்கத்தினர் என்னைப் பற்றி அறிந்து, பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலியைப் பற்றி ஒரு புத்தகம் தமிழில் எழுதித் தர முடியுமா என்று கேட்டனர். 1990-களில் வெளியான `பறவை மனிதர் சலீம் அலி’ என்ற நூலே எனது முதல் புத்தகம். அந்தப் புத்தகத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. புத்தகத்தை வெகுவாகப் பாராட்டிய தியோடர் பாஸ்கரன், “காட்டுயிர் தொடர்பான திரைப்படங்களை மேட்டுப்பாளையத்தில் திரையிடலாமே? அதற்கான திரைப்படங்களை நான் வாங்கித் தருகிறேன்” என்றார்.
இதையடுத்து, ஒரு ப்ரொஜக்டரை வாடகைக்கு வாங்கி, மேட்டுப்பாளையத்தில் ஒரு பள்ளியில் வாரம் ஒரு படத்தை திரையிட்டோம். 2000-ம் ஆண்டில் `நெருப்புக்குழியில் குருவி’ நூலை வெளியிட்டேன். இந்தப் புத்தகம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பாராட்டும், விமர்சனங்களும் மாறிமாறி வந்தன. தொடர்ந்து, `யானைகள்: அழியும் பேருயிர், இயற்கை: செய்திகள்-சிந்தனைகள், பாம்பு என்றால்?, வட்டமிடும் கழுகு, பல்லுயிரியம், அதோ அந்த பறவைபோல, தீங்கறியா உயிர்கள், பறக்கும் எந்திரங்கள், மனிதன் என்பவன்’ உள்ளிட்ட 15 நூல்களை எழுதினேன்.
`யானைகள்: அழியும் பேருயிர்’ என்ற புத்தகம் தமிழக அரசின் விருதைப் பெற்றது. காட்டுயிர் பாதுகாப்பு தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்ற கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என 1,000 கூட்டங்களில் பேசியுள்ளேன். இந்தியா முழுவதும் பயணித்து, 700-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்துள்ளேன். பல்வேறு நாளிதழ்கள், பருவ இதழ்களில் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளேன். இன்னமும் என் பயணம் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் முகமது அலி.
ஜேஸீஸ் அமைப்பு சார்பில் சிறந்த இளைஞருக்கான விருது, மாந்தன் இலக்கிய விருது, மரு.கோ.சிற்றம்பலனார் இலக்கிய விருது என பல்வேறு விருதுகள் முகமது அலிக்கு கிடைத்திருந்தாலும், `காட்டுயிர் காதலர்’ என்பதே தனக்குப் பிடித்தமானது என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT