Published : 28 May 2019 08:28 AM
Last Updated : 28 May 2019 08:28 AM

மண்வாசனை மிகுந்த `மானாவாரி மனிதர்கள்’- விருதுபெற்ற நாவலாசிரியர் சூர்யகாந்தன்

கொங்கு மண்ணின் கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளையும், உழைப்பில் சளைக்காத மண்ணின் மைந்தர்களையும் பாசாங்கு இல்லாத மண் மொழியில் பெருமைப்படுத்தியவர் நாவலாசிரியர் சூர்யகாந்தன். ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது `மானாவாரி மனிதர்கள்’ நாவல் அகிலன் நாவல் போட்டியில் பரிசு பெற்றதுடன், இலக்கிய சிந்தனையின் சிறந்த நாவலுக்கான விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது எத்தனையோ மண் வாசனைக் கதைகள் வந்திருக்கலாம்; வந்து கொண்டும் இருக்கலாம். ஆனால், மண்ணோடு கொஞ்சும் கொங்கு தேன் மொழியை, வெகுஜன இலக்கிய அரங்கம் உள்வாங்கக் காரணமாக இருந்தது இந்த நாவல்தான்.

`மென் ஆப் த ரெட் சாய்ல்’ (ஆங்கிலம்), ‘மாரி காரின்னு காத்திருக்குன்னு மனுசர்’ (மலையாளம்), ‘மேகா கீலியே தரஸ்தி லோக’ (ஹிந்தி), ‘மண்ணிண்ட மக்கள்’ (தெலுங்கு) மற்றும் மராட்டியம் என  5 மொழிகளில் மொழிபெயர்ப்பாகியிருப்பதே இந்த நாவலின் பெருமைக்குச் சான்று.

“இப்போது அந்த நாவல் செக்கோஸ்லோவாக்கியா மொழியில் மொழிபெயர்ப்பாகி கொண்டிருக்கிறது. எந்த மொழியிலும் இந்த தலைப்புக்கு உகந்த,  மண்மொழி மணக்கும் மொழிபெயர்ப்பு வாசகங்கள் அமையவில்லை, பொருந்தவில்லை என்பதே இந்த நாவலுக்கும், கொங்கு தமிழுக்குமான சிறப்பு” என பெருமிதம் கொள்கிறார் சூர்யகாந்தன் (62).

இவரது சொந்த ஊர் கோவை பேரூர் அருகேயுள்ள ராமசெட்டிபாளையம். இவருக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், வானொலிநிலைய அறிவிப்பாளர், கல்லூரி பேராசிரியர் என பல முகங்கள் உண்டு. அவரை சந்தித்தோம்.

“என் இயற்பெயர் மருதாசலம். எங்கள் கிராமத்துப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், பேரூர் சாந்தலிங்க அடிகளார் பள்ளியில் உயர்நிலைக் கல்வியும், கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.யு.சி, பி.ஏ. புவியியலும் படித்தேன். பின்னாளில் மண்ணுக்கான நிலவியல் கூறுகளை எழுதுவதற்கு, என் பட்டப் படிப்புதான் அடிப்படை உரம்.

அப்பா பாரம்பரிய விவசாயி.  காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தமிழ் படித்தேன். அப்போது என் இலக்கியப் பயணம் கவிதைகளில்தான் தொடங்கியது. 1973-1978-ல் கோவை ஈஸ்வரன் ‘மனிதன்’ என்ற மாத இதழை நடத்தினார். அதில் நிறைய கட்டுரை, கவிதைகள், கதைகள் வெளியாகும். அந்த சமயத்தில், விவசாயிகள் போராட்டம் நடந்தது. பெருமாநல்லூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, விவசாயிகள் பலர் இறந்தனர். அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட நானும் காயமடைந்தேன். அந்த வலியே கவிதையாக  மாறியது. ‘உழைக்கும் வர்க்கம் உறக்கமோ!’ என ஆரம்பிக்கும் கவிதை மனிதனில் பிரசுரமானது.

1974-ல் தாமரையில் `தண்டிக்கப்படாத குற்றவாளிகள்’ சிறுகதை எழுதினேன். இடையில், சிவந்த சிந்தனை, நீலக்குயில், கோவை ஞானி நடத்திய ‘வேள்வி’ போன்ற சிற்றிதழ்களில் சிறுகதைகள் வர ஆரம்பித்தன. 1978 வரை கவிதை, கதை என பயணம் தொடர்ந்தது.

சிவகங்கையில் கவிஞர் மீராவின் அகரம் பதிப்பகம், என் முதல் கவிதை நூலான ‘சிவப்பு நிலா’வை வெளியிட்டது.  1976-ல் நெருக்கடி நிலையின்போது, சோலை இதழைத் தொடங்கிய கே.சோமசுந்தரம், என்னை பணிக்கு அழைத்தார்.  எம்ஜிஆர் நிதியுதவி செய்வதாகவும் தெரிவித்தார். அந்த இதழில் நான் பணிக்குச் சேர்ந்தபோது,  எம்ஜிஆரிடம் அறிமுகம் செய்விக்கப்பட்டேன். நெல்சன் மாணிக்கம் சாலையில்தான் அந்த இதழின் அலுவலகம் இருந்தது. அங்கிருந்தே அண்ணா நாளிதழ், தாய் வார இதழ் வெளிவந்தது. இவற்றை ஆரம்பிக்கும்போது, அதே இடத்தில் சோலை இதழில் வேலை பார்த்த என்னையும்,  பணியில் இணைத்துக் கொண்டார் வலம்புரிஜான். எம்ஜிஆரின் வளர்ப்பு மகன் அப்பு (எ) ரவீந்திரன்தான் நிர்வாகம்.

நான் அங்கே துணை ஆசிரியர் என்பதால், 15 நாட்களுக்கு ஒருமுறை ராமாவரம் சென்று,  எம்ஜிஆரை சந்திக்கும் நிலை இருந்தது. அப்போது எம்ஜிஆர், ஜெயலலிதா எழுதும் கட்டுரைகளுக்கு ஃப்ரூப் பார்க்கும் பணி எனக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது.

தாய் இதழில் இருந்தபடியே, குங்குமம், கல்கி, தினமணிக் கதிர் இதழ்களில் எல்லாம் எழுதினேன்.  மகரந்த குமார், கடல் கொண்டான், ஆர்.எம்.சூர்யா, பர்வதா, சூரி என  பல புனைப் பெயர்களில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். 1983 வரை  தாய் இதழில் இருந்தேன். பிறகு எம்.ஃபில். சேர்ந்தேன். பின்னர், பி.ஹெச்டி. முடித்தேன்.

ஒருமுறை ஆலாந் துறை மலையடிவாரப் பகுதியில் தோட்ட வரப்பில் நடந்துகொண்டிருந்தேன். மாலை நேரத்து சூரியனின் சுடரில், சூரியகாந்தி மலர்கள் இதழ்விரித்து மினுங்கின. அப்போது சூர்யகாந்தன் என எனக்கு  புனைப்பெயர்  வைத்துக்கொண்டேன்.

பிறகு, கோவை எஸ்.என்.ஆர். கல்லூரியில் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். அதேசமயம்,  கோவை வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் தேர்வு பெற்றேன். இவ்விரண்டுக்கும் நடுவே, கவிதை, கதைகளும்  எழுதினேன்.

நாவல் என்பது பெரிய கதவைத் திறந்து உலகத்தைப் பார்ப்பது.  1984-ல் `அம்மன் பூவோடு’ என்ற முதல் நாவல் எழுதினேன். தொடர்ந்து நாவல்களில் கவனம் செலுத்தினேன். விவசாயம் பார்த்து வந்த அப்பா, திடீரென்று இறந்துவிட்டார். மலையடிவார பூமியை விற்றுவிட்டு, ஊருக்குள் வரவேண்டிய நிலை. அப்படி வந்தபோது, மனதில் இனம் புரியா வெறுமை. மண்ணோடும், மக்களோடும், பண்டங்களோடும் வாழ்ந்த வாழ்க்கை இவ்வளவுதானா என்ற ஏக்கம் இருந்தது.

எங்கள் ஊரில் மழை பொய்த்ததால் நிலவிய  தண்ணீர் பஞ்சம், வானம் பார்த்து நின்ற மக்கள் என மனதின் அழுகை ‘மானாவாரி மனிதர்கள்’ படைக்கத் தூண்டியது. அதை அகிலன் நாவல் போட்டிக்கு அனுப்பிவைத்தேன். நான்காவது மாதம் விருது அறிவிப்பு வந்தது. பிறகு, இலக்கிய சிந்தனை விருதும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் அந்த நாவல் பாடமாகவும் வைக்கப்பட்டது” என்றார் சூர்யகாந்தன்.

அவர் இதுவரை 15 நாவல்கள், 7 கட்டுரை நூல்கள், 3 கவிதைத் தொகுப்புகள், 11 சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இலக்கிய வீதி, லில்லி தேவசிகாமணி விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது, அழகிய நாயகி அம்மன் நினைவு விருது, உடுமலை தமிழ்ச் சங்க விருது என ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

கோவையிலிருந்து 1980-களில் வெளியான ஜனரஞ்சனி வார இதழில், துணை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், மீண்டும் விவசாயத்துக்கே திரும்பியுள்ளார் சூர்யகாந்தன். இவரது மனைவி கண்ணம்மா, மகன் சரவணக்குமார், மகள்கள் திவ்யபாரதி, சுவேதா. “கொங்கு மண்ணையும் மக்களையும் நேசிப்பதே எனக்குள் நிறைந்திருக்கும் பேராற்றலாக இருக்கிறது. அதுவே என் படைப்புகளை உயிர்ப்புடன் வைக்கிறது. அதுதான் என்னை இன்னமும் விவசாயியாகவே பரிணமிக்க வைக்கிறது” என்கிறார் பெருமிதத்துடன் சூர்யகாந்தன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x