Last Updated : 07 May, 2019 02:58 PM

 

Published : 07 May 2019 02:58 PM
Last Updated : 07 May 2019 02:58 PM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் உள்மாவட்டங்களில் வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அரபிக்கடல் பகுதியில் இருந்தும், மேற்கில் இருந்தும் வரும் காற்றை உள்இழுத்து ஃபானி புயல் சென்றதால், கிழக்கு திசையில் இருந்து தமிழகத்துக்கு நோக்கி வரும் காற்று குறைந்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் வெயில் அதிகபட்சமாக 42 டிகிரி வரை பதிவாகி வருகிறது. வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் மக்கள் மழையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பல ஏரிகள் முற்றிலும் வறண்டு மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன. ஆனால்,  வாட்டி எடுக்கும் வெயில் காரணமாக உள் மாவட்டங்களில் அவ்வப்போது வெப்பச்சலனத்தால் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், 'தமிழ்நாடு வெர்மேன்' எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தெரிவித்துள்ளதாவது:

''கிழக்குப் பகுதியில் இருந்து வரும் கடற்காற்று தாமதமாக வருவதால், காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் சென்னையில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. ஃபானி புயல் கரை கடந்த பின் மேற்கு திசையில் இருந்து வரும் காற்று பலவீனமடைந்துள்ளது. மேற்கு திசையில் இருந்து வரும் சூடான வறட்சியான காற்றும், கிழக்குத் திசையில் இருந்து வரும் ஈரப்பதம் உள்ள காற்றும் சந்திக்கும் இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யும்.

அந்த வகையில் வெப்பச்சலன மழை தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு உள் மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் இருந்தால், சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் பெய்யலாம். குறிப்பாக மேற்கு சென்னையில் மழை பெய்யலாம்.

உள் மாவட்டங்கள்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, நீலகிரி, கோவை, வால்பாறை பகுதிகளில் இடியுடன் கூடிய நல்ல மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இந்த மாவட்டங்களுக்கு அருகே இருக்கும் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று, நாளையும் வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்ப்புள்ளது.

பெங்களூரு, கேரளாவில் மழை

பெங்களூரிலும் வெப்பச்சலனத்தால் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சேலத்திலும் மழை இருக்கும். எப்போதெல்லாம் பெங்களூரில் மழை இருக்குமோ அப்போதெல்லாம் சேலத்திலும் மழை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்பச்சலனத்தால் கேரளாவிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த மழையால் கேரளாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பலத்த மழை பெய்தால்கூட, பரவலாக இருக்காது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை இருக்கும்.

வெப்பச்சலன மழையின்போது இடி, மின்னலுடன் கூடிய மழை இருக்கும் என்பதால், யாரும் மழை பெய்யும்போது திறந்த வெளியில், வீட்டின் மாடியில், மரத்தடியில், உயரமான கம்பம் ஆகிவற்றின் அருகே நிற்க வேண்டாம். 

சென்னையில் எப்படி?

மே மாதத்தைப் பொறுத்தவரை வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு உண்டு. அடுத்த இரு நாட்களுக்கு உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரைப் பொறுத்தவரை அடுத்து இருநாட்களுக்கு கடும் வெயில் இருக்கும். மழை பெய்யும் பட்சத்தில் 2 டிகிரி மட்டும் வெப்பம் குறையலாம்''.

 
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x