Published : 04 May 2019 12:00 AM
Last Updated : 04 May 2019 12:00 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கடந்த சில நாட்களாக வீசிய சூறைக்காற்றில் சுமார் 1 கோடி வாழை மரங்கள் சேதமடைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு, வள்ளியூர், செங்கோட்டை, கடையநல்லூர், தென்காசி, சங்கரன்கோவில், தூத்துக்குடிமாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் வட்டாரங்களில் நெல்லுக்கு அடுத்ததாக விவசாயிகள் வாழை பயிரிடுகிறார்கள். வாழைகளை தனித்தும், தென்னைகளுக்கு ஊடுபயிராகவும் விளைவித்து விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.
களக்காடு வட்டாரத்தில் உயர்ரகமான ஏத்தன் ரகமும், செங்கோட்டை வட்டாரத்தில் செவ்வாழை ரகமும் அதிகளவில் பயிராகின்றன. இதுதவிர ரசகதலி, பேயன், மொந்தன், ரோபஸ்டா, பூவன், நாட்டு வாழை என்று பல ரகங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.
கடந்த 2018 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடவு செய்யப்பட்டு, தற்போது அறுவடைக்கு வாழைகள் தயாராக இருந்தன. ஏக்கருக்கு, 900 முதல் 1000 வாழைகள் பயிராகும். ஏக்கருக்குரூ. 85 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்.
திடீரென, கடந்த 10 நாட்களில் அடுத்தடுத்து கோடை மழையுடன், சூறைக்காற்றும் வீசியதில்100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் 1 கோடிக்கும் மேலான வாழைகள் சேதமடைந்தன. சேத மதிப்பு மட்டும் பல கோடிகள் இருக்கும் என்றும் விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பெரும்படையார் கூறியதாவது:நாங்குநேரி, களக்காடு, ராதாபுரம் வட்டாரங்களில் மிகப்பெரிய சேதத்தை வாழை விவசாயிகள் சந்தித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றும், நகைகளை அடகுவைத்தும் வாழை பயிரிட்டிருந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை எவ்வாறு ஈடு செய்வது, வாங்கிய கடனை எப்படி திருப்பிச் செலுத்துவது, பிழைப்புக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். பலர் காப்பீடு செலுத்தவில்லை. அரசு பரிசீலித்து உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என்றார் அவர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் அடியோடு விழுந்துவிட்டன. விவசாயிகளின் வாழ்வு அடியோடு நிர்மூலமாகிவிட்டது. நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும்,வேம்பு, வாகை உள்ளிட்ட மரங்களும் வேரோடு சாய்ந்துவிட்டன. ஒருசில இடங்களில் கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி ஓரளவு வருவாய் ஈட்டலாம் என்று நம்பி வாழை பயிரிட்ட விவசாயிகள் நிலையை நினைக்கும்போது தாங்க முடியாத வேதனை ஏற்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ளன.
சேத மதிப்பீட்டுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். அரசுத் துறையினர் விரைவாக கணக்கெடுத்து, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதாகக் கருதி தேவையான நிவாரணங்களை விரைந்து வழங்க வேண்டும். சூறைக்காற்றில் சேதமடைந்த கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தை சீரமைக்க வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT