Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM
தென் மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்குச் செல்லும் வருவாய்த் துறை, கால்நடைத் துறை மற்றும் போலீஸாருக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதனால் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக்கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கி கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடந்து வருகின்றன.
இந்த போட்டிகள் தற்போது பொங்கல் பண்டிகை நாட்களில் தொடங்கி ஆண்டு முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு மற்ற விளையாட்டுகளைபோல் கிடையாது. காளைகளை பிடிக்கும்போது கவனம் சிதறினால் மரணம் என்ற நிலையே இந்த விளையாட்டில் உள்ளது. அதேபோல், காளைகள் முட்டி பார்வையாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்க அதிகாரிகள் கண்காணிப்பும் அவசியமாகிறது.
தற்போது மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஊருக்கு ஊர் கோயில் திருவிழாக்களையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது அதிகரித்துள்ளது. இந்த மாதம் மதுரை மாவட்டத்தில் மட்டும் 10 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. முன்பு, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளுக்கு மட்டுமே அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பும் இருந்தது. மற்ற போட்டிகளை அந்தந்த ஊர் கமிட்டிகள் நடத்தி வந்தனர்.
ஆனால், உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கியதால் தற்போது எந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பினாலும், அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதோடு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்காக போலீஸார், கால்நடை பராமரிப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் அங்கு செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக வேலைப்பளு அதிகரிக்கிறது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது: எந்தவிதமான வரைமுறையுமின்றி கோயில் விழாக்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவை நடத்தப்படுவதால் வருவாய்த் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, காவல் துறைக்கு ஆண்டு முழுவதும் அதிக வேலைப்பளு ஏற்படுகிறது. அரசின் மக்கள் நலத்திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்த முடியாமல் தாமதம் ஏற்படுகிறது.
சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், "வருவாய்த் துறைக்கும், கால்நடை பராமரிப்புத் துறைக்கும், காவல்துறைக்கும் வேறு வேலையே இல்லையா? ஜல்லிக்கட்டு நடத்துவதும் பாதுகாப்பு வழங்குவதும்தான் இவர்கள் வேலையா?" என்று கடிந்து கொண்டது. ஜனவரி மாதம் மட்டும் ஜல்லிக்கட்டை நடத்தி முடித்து விட வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி கால்நடை பராமரிப்புத் துறையினரை அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அவரவர் விருப்பத்துக்கு ஆண்டு முழுவதும் நடத்திக் கொள்ளலாம் என்ற நிலையை மாற்றி, ஜனவரி தொடங்கி மார்ச் மாதத்துக்குள்ளாக முடித்துக்கொள்ளும் வகையில் வரைமுறைப்படுத்த வேண்டும். ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தும்போது ஏதாவது ஓர் இடத்தில் கவனக்குறைவாக பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், மீண்டும் ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT