Published : 17 May 2019 12:00 AM
Last Updated : 17 May 2019 12:00 AM
சென்னையில் வீடுகள், ஹோட்டல்களின் உணவுக் கழிவுகளை 100 சதவீதம் உரமாக்க மாநகராட்சி எடுத்துவரும் நடவடிக்கைகளால், குப்பை கிடங்குகளுக்கு செல்லும் ஈரக் கழிவுகளின் அளவு வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் பாதியாக குறையும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும் 5,400 டன் குப்பை அகற்றப்படுகின்றன. அவை மக்கும் குப்பை, மக்கா குப்பை என வகை பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் அறிவியல் முறையில் இயற்கை உரம், சமையல் எரிவாயு, மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அறிவியல் முறையில் குப்பைகளை அழிக்கும் மாநகராட்சியின் நடவடிக்கையால், கிடங்குகளுக்கு செல்லும் குப்பையின் அளவு குறைகிறது.
கடந்த 2016-17-ல் மாநகரில் உள்ள 17 லட்சம் குடியிருப்புகளில் இருந்து தினமும் 5,249 டன் குப்பை வெளியேற்றப்பட்டன. அதில் 200 டன், அதாவது மொத்த குப்பையில் 4 சதவீதம் மட்டுமே அறிவியல் முறையில் அழிக்கப்பட்டன. தேசிய தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை பின்தங்கியதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
இந்நிலையில், அறிவியல் முறையில் குப்பையை அழிப்பது அதிகரித்துள்ளது. தற்போது மக்கும் குப்பைகள் 176 மையங்களில் இயற்கை உரம், எரிவாயு மற்றும் மின்சக்தியாக மாற்றப்பட்டு வருகிறது.
மேலும், அதிக அளவு குப்பையை உற்பத்தி செய்யும் ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, உணவு மற்றும் சமையலறை கழிவுகளை, அவர்களது இடத்திலேயே இயற்கை உரமாக மாற்ற மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி பூங்காக்களில் உருவாகும் இலைக் கழிவுகளை, குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல், அந்தந்த பூங்காவிலேயே 4 அடி ஆழத்துக்கு குழிகள் வெட்டி, மூங்கில் தட்டிகளைக் கட்டி, அவற்றில் சேமித்து உரமாக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் பெறப்படும் உணவு மற்றும் சமையலறைக் கழிவுகளை, பயனற்ற பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளில் கொட்டி மக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கூறியதாவது:வீடுகளில் இருந்து பெறப்படும் உணவு மற்றும் சமையலறைக் கழிவுகள் உள்ளிட்ட ஈரமான கழிவுகளை 100 சதவீதம், குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்வதை தடுத்து, அவற்றை மக்கச் செய்து உரமாக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, பல இடங்களில் பயனற்ற பிளாஸ்டிக் கழிவுநீர் தொட்டிகளை நிறுவி, வீடு வீடாக பெறப்படும் மக்கும் தன்மையுள்ள ஈரமான கழிவுகளை அதில் கொட்டி, மக்கச் செய்து உரமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்காக, பயனற்ற தொட்டிகளை வழங்குமாறு குடிநீர் வாரியத்திடம் கேட்டுள்ளோம்.
குப்பையை உரமாக்கும் மையங்கள் அதிகரிப்பு, கழிவுகளில் இருந்து எரிவாயு, மின்சாரம் தயாரிப்பு, ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உருவாகும் கழிவுகளை அங்கேயே மக்கச் செய்வது போன்ற பணிகளால் கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்களுக்கு செல்லும் குப்பையின் அளவு தற்போது 400 டன் வரை குறைந்துள்ளது.
பிளாஸ்டிக் தொட்டிகளில் உணவுக் கழிவுகளை கொட்டி உரமாக்குவதன் மூலம், மேலும் 300 டன் ஈரக் கழிவுகள் கிடங்குகளுக்கு செல்வது தடுக்கப்படும். மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளால், வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் மொத்த ஈரக் கழிவுகளில் 50 சதவீதம், குப்பை கிடங்குகளுக்கு செல்வது தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT