Published : 01 May 2019 12:00 AM
Last Updated : 01 May 2019 12:00 AM
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப் பாடங்களில் ஒருவர் கூட 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. இதற்கான காரணங்கள் குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. கோவை மாவட்டத்தில் 40,193 பேர் தேர்வு எழுதியதில், 38,762 பேர் தேர்ச்சி பெற்றனர். கணித பாடத்தில் 31 பேர், அறிவியல் பாடத்தில் 119 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 164 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற நிலையில், ஒருவர் கூட தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் 100 மதிப்பெண் பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஆசிரியர்கள் தெரிவித்த கருத்து:
தமிழ்ப் பாடம்
தமிழாசிரியர் கழக மாவட்ட செயலாளர் தேலா சிவக்குமார் கூறும்போது, ‘தமிழ் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது. பத்தாம் வகுப்பு மாணவனின் உளவியலுக்கு ஏற்ப கேள்விகள் கேட்கப்படாமல், போட்டித் தேர்வுகளுக்கு கேட்பது போல் கேள்விகள் கேட்கப்பட்டன. இதன்மூலம் மாணவர்கள் 100 மதிப்பெண் பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும்.
பொதுத்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சிக்கு 35 மதிப்பெண் வைத்திருப்பதற்கு காரணம், அந்த 35 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் எளிதாகவும், மீதமுள்ள கேள்விகளில் பாதி கேள்விகள் சராசரியாகவும், எஞ்சிய கேள்விகள் கடினமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு 80 சதவீத வினாக்கள் கடினமாக அமைந்திருந்தன.
நேரடியாக கேட்க வேண்டிய கேள்விகளில், சொற்களை மாற்றி, மாற்றி அமைத்து மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர். வரும் காலங்களில் இதுபோன்ற வினாத்தாள் வடிவமைப்பை கல்வித்துறை கைவிட வேண்டும். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடத்தப்படும் துணைத்தேர்வில், வினாத்தாளை எளிதாக வடிவமைத்து அவர்கள் தேர்ச்சி பெற கைகொடுக்க வேண்டும்’ என்றார்.
ஆங்கிலப் பாடம்
ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் டி.சரவணக்குமார் கூறும்போது, ‘ஆங்கிலப் பாடத்தில், கோவை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலேயே யாரும் 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. வினாத்தாள் மிகவும் கடினமாக வடிவமைக்கப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம்.
2 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கடினமாக இருந்தன. ‘போயம்' வரிகள் கொடுத்து அதில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மறைமுகமாகவும், சற்று சிந்தித்து பதிலளிக்கும் வகையிலும் அமைந்திருந்தன.
பிழைகளைத் திருத்தும் வகையில் கேட்கப்பட்டிருந்த வினாக்களில் ஒன்று கடினமாக இருந்தது. இலக்கணப் பகுதியில் ஒரே மாதிரியான பதில்களைக் கொண்ட கேள்விகள் இருந்தன. அதில் எதை தேர்வு செய்வது என்று மாணவர்கள் குழம்பியிருப்பார்கள்.
2-ம் தாளில் 35 மதிப்பெண்களுக்கு ‘ஸ்டோரி' எழுதும் வகையில் கேள்விகள் அமைந்தன. அதில் முழு மதிப்பெண் யாராலும் பெற முடியாத அளவுக்கு கடினமாக அமைந்திருந்தன. சரியான விடையைத் தேர்வு செய்தல் பகுதியில் குழப்பமான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. மீண்டும், மீண்டும் கேட்கப்படும் கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்படவில்லை. புத்தகத்துக்கு உள்ளிருந்து அதிக கேள்விகள் அமைந்திருந்தன. வழக்கமான சொற்களுக்கு பதிலாக, மாற்றுச் சொற்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. இதனால் மாணவர்களால் 100 மதிப்பெண் பெற முடியவில்லை’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT