Published : 20 May 2019 12:00 AM
Last Updated : 20 May 2019 12:00 AM
முயற்சியும், பயிற்சியும் இருந்தால் யாரும் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் காளி வீரபத்ரன். இவர், உப்புக் காற்று வீசும் மீனவக் கிராமமான சென்னையை அடுத்த கோவளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தில் பிறந்தவர்.
பரதநாட்டியத்தில் கொண்ட ஆர்வத் தின் காரணமாக அதை திறம்படக் கற்று, பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறார். பரதநாட்டியக் கலையை கலாஷேத்ரா எனும் பெருமை வாய்ந்த பள்ளியில் கற்றுக்கொள்ளக் காரணமாக இருந்த சாரா சந்த், டி.எம்.கிருஷ்ணா, முருகப்பா அறக்கட்டளையினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கிறார் காளி..
‘‘எனக்கு ரெண்டு அண்ணன், மூணு அக்கா. நான் பிறந்த சில ஆண்டுகளிலேயே அப்பா வீரபத்ரன் தவறிட்டார். அம்மா இல்லாமல்லி, கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாத்தினாங்க. குடும்பச் சூழல் காரணமா, பாட்டி வீட்டில் வளர்ந் தேன். ஒரு அண்ணன் மூளைக் காய்ச்சலால் இறந்த பிறகு, அம்மாகூடவே தங்கிட்டேன்.
2-ம் வகுப்பு படிக்கும்போதே, நடனத்தின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் ஊரில் யார் வீட்டில் என்ன விசேஷம் என்றாலும் என் நடனம் நிச்சயம் இருக்கும்.
சுனாமி தாக்குதலுக்குப் பிறகு கோவளத்தில் தன்னார்வ அமைப்பு கட்டித் தந்த சமூகநலக் கூடத்தின் திறப்பு விழா நடந்தது. அதில், இடுப்பில் ஒரு கச்சையை கட்டிக்கொண்டு ஆடினேன். தன்னார்வ அமைப்பின் நிறுவனர்களுக்கு என் நடனம் பிடித்துப்போக, கலாஷேத்ராவில் நடனம் கற்றுக்கொள்ள என்னை அழைத்துச் சென்றனர்.
திரைப்படங்களில் பத்மினி, வைஜெயந்தி மாலா ஆகியோரின் நடனக் காட்சிகளைப் பார்த்தே நடனமாட ஆரம்பித்தேன்.
வனத்துக்குள் பள்ளி
கலாஷேத்ரா வளாகமே ரொம்ப பிரமிப்பா, ஒரு காட்டுக்குள் இருப்பதுபோல இருந்தது. அப்போது பிளஸ்1 படிச்சிட்டிருந்தேன். எப்படியாவது பிளஸ்2 முடிக்கணும் என்பதுதான் என் நோக்கமா இருந்தது. இதை கலாஷேத்ராவிலும் சொல்லிட்டு வந்துட்டேன். தேர்வு முடிந்ததும் மீண்டும் போனேன்.
பரத நாட்டியத்தில் முறையாக எப்படி வணக்கம் செலுத்துவது என்றுகூட எனக்கு தெரியாது. ‘சலங்கை ஒலி’ திரைப்படத்தில் வரும் ‘ஓம்.. நமச்சிவாயா’ பாடலைத்தான் நாட்டியமாக ஆடினேன். நாட்டியத்தில் எனது ஆர்வத்தைப் பார்த்த கலாஷேத்ரா இயக்குநர் லீலா சாம்சன் என்னை அந்த பள்ளியில் சேர்த்துக்கொண்டார்.
அபிநயமே மொழி
கலாஷேத்ராவில் தமிழில் பேசும் மாண வர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர் களுடன் பேசுவேன். பலரும் மலையா ளம், ஆங்கிலம் பேசுவார்கள். மொழி தெரியாதவர்களுடன் அபிநயத் தாலேயே என் நட்பு வளர்ந்தது. இப்போது ஓரளவு ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் பேசுகிறேன் என்றால், கலாஷேத்ராவில் படித்ததும் முக்கிய காரணம்.
தொடக்கத்தில் நாட்டியப் பயிற்சிகள் மிகவும் கடினமாக இருந்தன. அங்குள்ள சூழ்நிலையோடும் என்னால் பொருந்திப்போக முடியவில்லை. வீட்டு ஞாபகமாகவே இருக்கும். அம்மாவிடம் தொலைபேசியில் அழுவேன்.
‘பழகினா எல்லாம் சரியாகிடும் செல்லம். உனக்கு சிரமமா இருந்தா வீட்டுக்கே வந்துடு. மாடு வாங்கித்தாரேன்.. மேய்க்கிறியா?’’ என்பார் அம்மா விளையாட்டாக. நானும் என் சிரமங்கள், கவலைகளை மறந்துவிட்டு, மும்முரமாக பயிற்சியில் இறங்கிவிடுவேன்.
இப்படி பயிற்சியை தொடங்கியதால், முதல் ஆண்டிலேயே சிறந்த மாணவனாக தேர்வானேன். இதன்மூலம் கல்வி உதவித்தொகையும் கிடைத்தது.
கலைகளின் சங்கமம்
கலாஷேத்ராவில் நாட்டியம் தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டயப் படிப்பை கடந்த 6 ஆண்டுகளில் முடித்ததோடு, முருகப்பா அறக்கட்டளையின் உதவியுடன் நாட்டிய மேதை பேராசிரியர் சி.வி.சந்திரசேகரிடமும் நாட்டிய நுணுக்கங்களை ஓராண்டு காலம் கற்றேன். தற்போது நிர்மலா நாகராஜிடம் பயிற்சி எடுத்துவருகிறேன்.
இதற்கிடையில், தக்சிண சித்ராவில் கிராமியக் கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டம், தப்பாட்டம் போன்றவற்றில் திறமையை வளர்த்துக் கொண்டேன்..’’ என்று தன் அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார் காளி.
‘‘பரதநாட்டியத்தின் சில அடவுகள் ஒயிலாட்டத்திலும், தாளங்கள் தப்பாட்டத் திலும் வெளிப்படும். தேவராட்டத்தின் சில கையசைவுகள் ஒடிசியிலும் வெளிப்படும். என்னைப் பொருத்தவரை, விதவிதமாக பல்வேறு நடன வகைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒரே கலையின் பல வடிவமாகத்தான் பார்க்கிறேன்’’ என்று கூறும் காளி, இத்தகைய பொதுவான அம்சங்களைக் கொண்டு ‘வேரும் விழுதும்’ எனும் தலைப்பில் குழுவினரோடு நாட்டிய நிகழ்ச்சியும் நடத்துகிறார்.
நிருத்தா நிருத்தியா நாட்டியா போன்ற சிறப்பான பரதநாட்டிய அம்சங்களை தனது நாட்டியத்தில் வெளிப்படுத்தியதன் மூலம், மியூசிக் அகாடமியின் ‘ஸ்பிரிட் ஆஃப் யூத்’ வழங்கும் சிறந்த நடனக் கலைஞருக்கான விருதைப் பெற்றுள்ளார். ஹெச்.சி.எல். நடத்தும் போட்டியிலும் வென்ற இவர், தற்போது மியூசிக் அகாடமியில் மார்கழி இசை நாட்டிய விழாவுக்கு முன்னதாக நடக்கும் போட்டியில் பங்கெடுப்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதிலும் தேர்வாகிவிட்டால், மியூசிக் அகாடமியில் நடக்கும் பிரதான விழாவில் மேடையேறும் வாய்ப்பு காளிக்கு கிடைக்கும்.
காளியோட ஆட்டத்த இனிமேதான் முழுசா பார்க்கப் போறோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT