Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM

தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கைநழுவிய வெற்றி: கூட்டணி வியூகத்தில் குழம்பிய தேமுதிக

கூட்டணி வியூகத்தில் ஏற்பட்ட குளறுபடியால் தொடர்ந்து 3-வது முறையாக தேமுதிக தோல்வியை சந்தித்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, 4 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளது. கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், 3 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகளை பெற்றார். விருதுநகரில் 3 லட்சத்து 13 ஆயிரம், திருச்சியில் 1 லட்சத்து 62 ஆயிரம், வடசென்னையில் 1 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக, பாமக, பாஜக என வலுவான கூட்டணியில் இடம் பெற்றிருந்தும் ஒரு தொகுதியில்கூட தேமுதிக வெற்றி பெறாதது, அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, 29-ல் வெற்றி பெற்றது. ஆனால், சில மாதங்களிலேயே அதிமுகவுடன் மோதல் போக்கு ஏற்பட்டு, கூட்டணியில் இருந்து விலகியது. அதன்பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக கூட்டணியில் சேர்ந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக முயற்சித்து வந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன. ஆனால், கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்கூட வெற்றி பெற முடியவில்லை.

தற்போது நடந்த மக்களவைத் தேர்தலிலும் முதலில் திமுகவுடன்தான் தேமுதிக பேசத் தொடங்கியது. அதிகதொகுதிகள் கேட்டதால் பேச்சுவார்த்தையில் சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பாஜக மூலம் அதிமுக பக்கம் போனது தேமுதிக. மக்கள் நலக் கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாம் தற்போது திமுகவுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், தேமுதிக தோல்வியை தழுவியுள்ளது. 2009-ல் 10.1 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம் தற்போது 2.19 சதவீதமாக சரிந்துவிட்டது.

தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக கட்சித் தலைமை கருத்து கேட்டபோது, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் திமுக கூட்டணிதான் நமக்கு சாதகமாக இருக்கும் என கூறினோம். அதன் அடிப்படையில்தான் திமுக வுடன் ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வராததால், தேமுதிக தலைமை நிர்வாகிகள் ஆர்வம்காட்டவில்லை.

திமுகவை பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்ததும் அந்தக் கூட்டணியில் நாங்கள் இடம்பெறாமல் போனதற்கு ஒரு காரணமாகிவிட்டது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைக்காததால் தோல்வி அடைந்தோம். இப்போதும் திமுக கூட்டணியில் சேராததால் தோல்வி அடைந்துள்ளோம். கட்சியின் மூத்த நிர்வாகிகளும் கூட்டணி விஷயத்தை சிறப்பாக கையாளவில்லை. கூட்டணி வியூகம் அமைப்பதில் ஏற்பட்ட குழப்பதால் தொடர்ந்து 3 தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x