Last Updated : 13 May, 2019 06:54 PM

 

Published : 13 May 2019 06:54 PM
Last Updated : 13 May 2019 06:54 PM

ஹைட்ரோகார்பன்;  புதுச்சேரி, காரைக்காலில் கிணறு வெட்ட 41 சதுர கி.மீ. தேர்வு? அரசுக்கு தகவலே வரவில்லை:  நாராயணசாமி

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 41 சதுர கி.மீ. தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுதொடர்பான தகவலே அரசுக்கு வரவில்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விழுப்புரம் தொடங்கி புதுச்சேரி வழியாக  நாகை வரை ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி தந்துள்ளது. இத்திட்டத்துக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கடும் மவுனத்தில் உள்ளன.

இதுதொடர்பாக விசாரித்த போது, "ஹைட்ரோகார்பன் திட்டத்தின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் 274 கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கிணறுகள் ஒவ்வொன்றும் 3 ஆயிரத்து 500 மீட்டர் முதல் 4 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஆழம் இருக்கும்.

விழுப்புரத்தில் 139 சதுர கி.மீ. கிணறு வெட்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோல் புதுச்சேரியில் புதுச்சேரி பிராந்தியத்தில் 2 சதுர கி.மீ., காரைக்காலில் 39 சதுர கி.மீ. கிணறு வெட்ட நிலம் தேர்வாகியுள்ளதாகத் தெரிகிறது. புதுச்சேரி பிராந்தியத்தில் அரியாங்குப்பம் முதல் பனித்திட்டு வரையிலான கடற்கரைப் பகுதிகள் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

ஹைட்ரோகார்பன் திட்டம் வரும் இப்பகுதியில் ஏம்பலம், மணவெளி ஆகிய தொகுதிகளில் வருகிறது. இத்தொகுதி எம்எல்ஏக்களாக காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் கந்தசாமியும், அரசு கொறடா அனந்தராமனும் உள்ளனர். இருவரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு இதுவரை தகவலே வரவில்லை. சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படும் எத்திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இத்திட்டம் புதுச்சேரியில் செயல்படுத்தப்படாது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x