Published : 09 May 2019 08:35 AM
Last Updated : 09 May 2019 08:35 AM

பொன்னை விரும்பும் பூமியிலே... பொற்கொல்லர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.கமலஹாசன்!

இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு சில ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது. ஆனால், தகுதியும், திறமையும் இருக்கும் பொற்கொல்லர்கள் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்பிருக்கிறது. உலகில் பெண்கள் இருக்கும்வரை நகைத் தொழில் அழிந்துவிடாது. அதனால், இளைஞர்கள் பொற்கொல்லர் தொழிலில் நம்பி இறங்கலாம். கல்வி, தொழில்நுட்பத் தகுதியுடன் வந்தால் வெற்றி நிச்சயம்” என்கிறார் கோவை பொற்கொல்லர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.கமலஹாசன்(48).

அட்சய திருதியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் இரு நாட்களுக்கு முன் கூட்டம் அலைமோதியது. பல்லாயிரம் கோடி மதிப்பில் தங்க நகைகள் விற்பனை நடந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், பாரம்பரியமாய் தங்க நகைகளை உருவாக்கி வரும் பொற்கொல்லர்களின் நிலையை அறிய விரும்பி எஸ்.எம்.கமலஹாசனை சந்தித்தோம்.

“பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம். பெற்றோர் மாணிக்கம்-சியாமளா. பாரம்பரியமாக  நகை செய்வதுதான் தொழில். மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். வீட்டு வாயிலிலேயே பட்டறை இருக்கும். காலையில் 5 மணிக்கே எழுந்து, பட்டறையை கூட்டி, சுத்தம் செய்து, திறந்துவைப்போம். பின்னர் பள்ளிக்கூடம் சென்றுவிட்டு, மதியம் 3 மணிக்கு பட்டறைக்கு வந்து, 7 மணி வரை வேலை செய்வேன். நடுத்தர குடும்பம் என்பதால், அன்றாடம் உழைத்தால்தான் வாழ்க்கை நடத்த முடியும்.

ஐந்து வயதில் இருந்தே பட்டறை வேலை பழகியதால், படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை. இதனால் 10-வது முடித்துவிட்டு, பட்டறைக்கே வந்துவிட்டேன். சின்ன கிராமம் என்பதால், பெரிய அளவுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில் கோவை தான் நகை தயாரிப்புக்குப் பிரசித்தி பெற்றது. இதனால், 1986-ல் கோவைக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு 16 வயது. தில்லை நகரில் கந்தசாமி ஆசாரியிடம் மாதம் ரூ.1,500 சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். கோவை தங்க நகை தொழில்நுட்பத்தை முழுமையாக கற்றுக்கொண்டேன். கிராமங்களில் கையால் தகடு செய்து, கம்பி இழுக்க 5 நாட்களாகும் நிலையில், இங்கு ஒரே நாளில் இயந்திரம் மூலம் செய்ய முடிந்தது.

 தீபாவளி, பொங்கலுக்கு மட்டும்தான் ஊருக்குப் போவேன். 1992-ல் பெரியகடை வீதியில் சொந்தமாக பட்டறை தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, 150-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளித்தேன். சொந்த ஊரிலிருந்து பலரையும் அழைத்துவந்து, வேலைவாய்ப்பு வழங்கினேன். ஒரு கட்டத்தில் பலரும் தனித்தனியாக பட்டறைகளைத் தொடங்கினர்.

மன்னர் காலத்தில் இருந்தே தங்க நகைகளுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. கால் கொலுசு  முதல், கோபுரக் கலசம் வரை தயாரிக்கும் பொற்கொல்லர்களுக்கு, சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து மிகுந்த மதிப்பு இருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தென்னிந்தியா முழுவதும் தங்க நகைகளை விரும்பாத பெண்களே இல்லை எனலாம். அரசர்கள்கூட போர் நடத்தி, எதிரிநாட்டிலிருந்து தங்கத்தை அள்ளிக் கொண்டுவருவார்கள். பல்வேறு நாடுகளில் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையிலும், இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருப்பதற்குக் காரணம், மக்கள் பெரும்பாலும் தங்கள் சேமிப்பை தங்கமாக வைத்திருப்பதே காரணம். வயதான மூதாட்டியிடம்கூட 15, 20 பவுன் நகைகள் இருக்கும்.

தொடக்கத்தில் கோவையில் நெக்லஸ், வளையல், ஆரம் உள்ளிட்ட பாரம்பரிய நகைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன. கையால் செய்யப்பட்ட, கெட்டியான இந்த நகைகளுக்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு இருந்தது. நவீன இயந்திரங்களின் வருகைக்குப் பின்னர், மெல்லிய நகைகள் உற்பத்தி அதிகரித்தது.

வட மாநிலங்களில் வெள்ளி நகைகளை விரும்பினாலும், தென் மாநிலங்கள் முழுவதும் தங்க நகைகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. அதேபோல, உலகில் எங்கெல்லாம் தென் மாநிலத்தவர்கள் இருக்கிறார்களோ, அங்கு நகைகள் விற்பனை இருக்கும். கோவையில் தயாரிக்கப்படும் நகைகள்,நுணுக்கமான வேலைப்பாடுகளுக்குப் பெயர் பெற்றவை.

கோவையும்... கொல்கத்தாவும்...

எனினும், அடுத்தடுத்த தலைமுறை இயந்திரமயமாக்கலை ஏற்றுக் கொள்ளாததால், கோவையின் இடத்தை கொல்கத்தா கைப்பற்றத் தொடங்கியது. ஆரம்பத்தில் கோவையில் சுமார் 1.5 லட்சம் பொற்கொல்லர்கள் இருந்தனர். குண்டுவெடிப்பு, மின் தடை, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் ஏற்பட்ட பாதிப்புகள்,  இந்த எண்ணிக்கையை தற்போது 75 ஆயிரமாக குறைத்துவிட்டது. 1990-களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தமாக நகைகளை உற்பத்தி செய்யத் தொடங்கின.

எனினும், தற்போதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்க நகைத் தொழிலை நம்பியுள்ளன. அடுத்த தலைமுறைக்கு தொழில் நுட்பத்தை கற்றுத்தர தங்க நகை தொழிற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும், இயந்திரங்களுடன் கூடிய பொது பயன்பாட்டு மையம் அமைக்க வேண்டும், ஒரே இடத்தில் பொற்கொல்லர்கள் அமர்ந்து பணியாற்ற தங்க நகைப் பூங்கா அமைக்க வேண்டும் என்றெல்லாம் பொற்கொல்லர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கூட்டமைப்பு தொடக்கம்!

1966-ம் ஆண்டு முதலே பொற்கொல்லர் களுக்கான அமைப்புகள் இருந்தாலும், தனித்தனி சங்கங்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. இதனால், 45 சங்கங்களை இணைத்து 2018-ல் கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கி,  எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பொற்கொல்லர்கள் இணைந்து நிறுவனமாகவும் பதிவு செய்துள் ளோம். இதற்கு 14 இயக்குநர்கள் உள்ளனர்.

ஹால்மார்க் தரக்கட்டுப்பாடு!

1998-ல் தங்கத்தின் தரத்தை உறுதிபடுத்துவதற்காக மத்திய அரசு ஹால்மார்க் தரக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. இது மிகவும் வரவேற்கத்தக்கது.

தற்போது கோவையில் 17 தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் உள்ளன. இன்னும் நிறைய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் வர வேண்டும். முன்பெல்லாம் திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் , ஆசாரியை வீட்டுக்கே அழைத்து, நகைகளுக்கு ஆர்டர்கள் கொடுப்பார்கள். ஆனால் இப்போது அவசரகதியில் கடைகளுக்குச் சென்று, நகைகளை வாங்குகின்றனர்.பாரம்பரிய பொற்கொல்லர்கள் அல்லது பாரம்பரியமாய் நகை விற்பனை செய்பவர்களிடம் நகைகளை வாங்கலாம்.

அதேபோல, மத்திய அரசின் தரக் கட்டுப்பாடான 916 ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே, நகைகளை வாங்க வேண்டும். நகை வாங்கும் கடை ஹால்மார்க் உரிமம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். விலை மதிப்பு மிக்க தங்கத்தை வாங்கும்போது, நாம் கொடுக்கும் பணத்துக்கு உரிய மதிப்பிலான தங்கம் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x