Published : 02 May 2019 08:47 PM
Last Updated : 02 May 2019 08:47 PM

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் சட்டப்பேரவைத்தலைவர் விலகி நிற்கவேண்டும்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் சட்டப்பேரவை தலைவர் ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக 136 இடங்களைப் பெற்றது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 135 ஆனது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக வென்றதால் டிடிவி அங்கு எம்.எல்.ஏ ஆனார். டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததால் அதிமுக எண்ணிக்கை 117 ஆனது.

இரண்டு எம்.எல்.ஏக்கள் மறைவு ஒருவர் தகுதியிழப்பு காரணமாக மேலும் 3 பேர் குறைய தற்போது 114 ஆக உள்ளது. இதில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு எப்படியும் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பதால் 111 தான் உண்மையான எண்ணிக்கை.

இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளின் தேர்தல் முடிந்தால் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்க 7 இடங்கள் தேவை (அதில் சட்டப்பேரவை தலைவரும் அதிமுக எம்.எல்.ஏ கணக்கில் ஓட்டளிக்கிறார்) இதில் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் நிலை கேள்விக்குறி.

இந்நிலையில் திடீரென 3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்விதத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 பேரை தகுதி நீக்கம் செய்துள்ளது ஆட்சியை காப்பாற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

3 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் அவர் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது என எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது.

ஆனால் சட்டப்பேரவைத் தலைவரை இது கட்டுப்படுத்தாது என ஆளுங்கட்சித்தரப்பும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் இந்து தமிழ் திசை சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

சட்டப்பேரவை தலைவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது இதனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று ஒரு பக்கமும், எடுக்கலாம் என ஒரு பக்கமும் வாதம் வைக்கப்படுகிறது, எது சரி?

நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டப்பேரவைத்தலைவர் மீது கொடுத்துவிட்டாலே கௌரவமாக ஒதுங்கிக்கொள்வதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பு.

பிரிட்டீஷ் நாடாளுமன்ற நடைமுறைப்படித்தான் நாம் இயங்குகிறோம். மே என்பவர் அதுகுறித்து எழுதியுள்ளார். அந்த சட்டத்தின்படிதான் பிரிட்டீஷ் நாடாளுமன்றம் இயங்குகிறது, அந்த நாடாளுமன்ற முறையைத்தான் நாம் பின்பற்றுகிறோம்.

இங்கிலாந்தில் இந்தியாவைப்போல் எழுதப்பட்ட சட்டம் கிடையாது. இஸ்ரேல், நியூசிலாந்து, இங்கிலாந்து இங்கெல்லாம் எழுதப்பட்ட நடைமுறைச்சட்டம் இல்லை. சட்டப்பிரிவுகள் கிடையாது. அங்கு மாண்பு, மரபுப்படித்தான் இயங்குகிறார்கள்.

அதுதான் நமக்கு முன்னுதாரணம், நாம் பிரிட்டீஷ் நாடாளுமன்ற முறைப்படித்தான் நடக்கிறோம், அவர்கள் மரபையும் மாண்பையும் மீறாமல்தான் நிற்பார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் சட்டப்பேரவைத்தலைவர் மீது பெரும்பான்மையான எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லை என தீர்மானம் கொண்டுவந்தால் விலகிவிட்டு ஒதுங்கி நிற்பதுதான் முறை.

அவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்?

நம்பிக்கை இல்லை என்று சொல்லும்போது அதன் அடிப்படையில்தான் இவர்கள் பணி இருக்கவேண்டுமே தவிர ஆளுங்கட்சி இஷ்டத்துக்கு நடக்கக்கூடாது.

அரசியல் சதுரங்கத்தில் இவர்களுக்கு இவ்வளவுதான் எம்.எல்.ஏ இருக்கிறது என்பது நன்றாக பட்டவர்த்தனமாக கண்ணுக்கு தெரிகிறது. எதையாவது கேம் விளையாடி எப்படியாவது அண்டிப்பிழைத்து ஆட்சியை நீட்டிக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆளுங்கட்சிக்கு 125 எம்.எல்.ஏக்கள் வைத்து 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் நாம் கேட்கப்போவதில்லை. ஆனால் விளிம்பில் ஒன்றிரண்டு என்கிற நிலையில் உள்ளது. அதை உணர்ந்து தார்மீகமாக சட்டப்பேரவைத்தலைவர் விலகிக்கொள்வதுதான் நியாயம், அதுதான் முறை.

18 எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையில் உயர் நீதிமன்ற அமர்வு சட்டப்பேரவைத்தலைவர் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளதே?

சட்டப் பேரவைத்தலைவர் நடவடிக்கை குறித்து எத்தனை வழக்குகளில் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது? பிரிட்டீஷ் நாடாளுமன்றம்தான் நமக்கு அடிப்படை.

தமிழ்நாடு நாடாளுமன்றம், இந்திய நாடாளுமன்ற முறை கணக்கு இல்லை. பிரிட்டீஷ் நாடாளுமன்றம் மே என்று ஒருவர் சட்டத்திட்டங்களை எழுதியிருக்கிறார்.

அதுதான் நடைமுறை, அதை மரபு ரீதியாக கடைபிடிக்கவேண்டும் அதுதான் என் கருத்து”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x