Published : 13 May 2019 12:00 AM
Last Updated : 13 May 2019 12:00 AM

பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜர் மையம் அமைக்க மத்திய அரசு கொள்கை வெளியீடு: பெரிய நகரங்களில் கட்டமைப்பை மேம்படுத்த முடிவு

பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜர் மையங்கள் அமைக்க மத்திய அரசு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சமாக 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் பெரிய நகரங்களில் பேட்டரி வாகனங்களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களை குறைத்து, பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. மத்திய அரசு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனங்கள், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களை பேட்டரி தொழில்நுட்பத்தில் இயக்குவதை அதிகரிப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தேசிய மின் போக்குவரத்து திட்டத்தின்படி அடுத்த 4 ஆண்டுகளில் 70 லட்சம் பேட்டரி வாகனங்களை இயக்கும் வகையில் வசதியை அரசு ஏற்படுத்தவுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக, சிறிய வாகனங்களுக்கு ஏற்றவாறு சார்ஜர் மையங்களை அமைக்கவுள்ளன. முதல்கட்டமாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்ஜர் மையங்களை அமைக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, பேட்டரி வாகனங்களை இயக்குவதற்கான சார்ஜர் மையங்களை அமைக்க புதிய கொள்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:நாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெரிய நகரங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. டெல்லியில் அதிகபட்சமாக 38.38 மில்லியன் டன், மும்பையில் 22.7 மில்லியன் டன், சென்னையில் 22.1 மில்லியன் டன், பெங்களூருவில் 19.8 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் வெளியாகி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே, பேட்டரி வாகனங்களை இயக்குவதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்ததனி அமைப்பு உருவாக்கப்படுகிறது. முதல்கட்டமாக குறைந்தபட்சம் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் பெரிய நகரங்களில் பொதுமக்களின் வசதிக்காக பேட்டரி சார்ஜர் மையங்கள் அமைக்க வேண்டும்.

அதன்படி, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், சூரத், பூனே போன்ற நகரங்களிலும், இந்த நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளிலும் சார்ஜர்மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களுக்கு சிறியவகை பேட்டரி சார்ஜர் மையங்களும், பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு பெரியசார்ஜர் மையங்களும் அமைக்கப்படும். நகரங்களின் உட்பகுதிகளில் 3 கி.மீ தூரத்துக்கு ஒரு சார்ஜர் மையமும், நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ தூரத்துக்கு ஒரு சார்ஜர் மையமும் என சாலையின் இருபுறமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் தனியாருடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அமைப்புடன் ஒப்பந்தம்

தமிழ்நாட்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவை குறைக்கும் வகையில் பேட்டரி பேருந்துகளை இயக்க தமிழக அரசு சி.40 என்ற சர்வதேச அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 2 ஆயிரம் பேட்டரி பேருந்துகளை இயக்க திட்டமிட்டு, இதற்கான கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சென்னையில் தியாகராயநகர், பிராட்வே, புரசைவாக்கம், தாம்பரம் போன்ற மக்கள் தொகை அதிகமாகவுள்ள இடங்களில் முதல்முறையாக 200 பேட்டரிபேருந்துகளை இயக்கவுள்ளோம். இதைத் தொடர்ந்து படிப்படியாக பேட்டரி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏற்கெனவே 2 பேட்டரி பேருந்துகளை இயக்கி ஆய்வு செய்துள்ளோம். பேட்டரி சார்ஜர் மையங்களை அமைக்க தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் 3-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போக்குவரத்து பணிமனைகள் உட்பட எங்கெல்லாம் பேட்டரி சார்ஜர் மையங்களை அமைப்பது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். பேட்டரி பேருந்துகளை வாங்க மத்திய, மாநில அரசுகளிடம் போதிய நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x