Published : 18 May 2019 12:00 AM
Last Updated : 18 May 2019 12:00 AM

மருத்துவ கவுன்சில் பரிந்துரையால் 317 மருத்துவர் பணியிடம் மாயம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தரமான கல்வி, சிகிச்சைக்கு சிக்கல்

இந்திய மருத்துவக் கவுன்சில்பரிந்துரைப்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் மருத்துவர்பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இதுவரை இருந்த 317 பழைய மருத்துவர் பணியிடங்கள் மாயமாகி உள்ளன. இதனால், மாணவர்களுக்குத் தரமான கல்வியும், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முன்பு நோயாளிகள் வருகை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மருத்துவர் மற்றும் மற்ற மருத்துவப் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

இந்த அடிப்படையில் 2018-ம்ஆண்டு தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 1,105 பேராசிரியர் கள், 1,168 இணைப் பேராசிரியர்கள், 2,119 உதவிப் பேராசிரியர்கள், 1,397 முதுநிலை உறைவிட மருத்துவர்கள், 506 கற்பிக்கும் (டியூட்டர்) மருத்துவர்கள், 908 இளநிலை உறைவிட மருத்துவர் பணியிடங்கள் இருந்தன.

இந்த மருத்துவர் பணியிடங்களே போதுமானதாக இல்லாததால் மருத்துவ மாணவர்களைக் கொண்டு மருத்துவக் கல்லூரி நிர்வாகம், நோயாளிகளுக்கான சிகிச்சைகளை தடையில்லாமல் வழங்கிச் சமாளித்து வந்தது. ஆனாலும், சிகிச்சைகள் தாமதமாவதாகக் கூறி பெரிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவ்வப்போது சர்ச்சைகளும், பிரச்சினைகளும் ஏற்படும்.

இந்நிலையில் தற்போது இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைப்படி தமிழக அரசு தனிக் குழுவை அமைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர் பணியிடங்களை மறுசீராய்வு செய்தது. இந்தக் குழு, மருத்துவ மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் மருத்துவர் பணியிடங்களை உருவாக்கி கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசாணை வெளியிட்டது.

இந்தப் புதிய அரசாணையின் அடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தற்போது 1008 பேராசிரியர்கள், 1,013 இணைப் பேராசிரியர்கள், 2,911 உதவிப் பேராசிரியர்கள், 1,143 முதுநிலை உறைவிட மருத்துவர்கள், 606 கற்பிக்கும் மருத்துவர்கள், 205 இளநிலை உறைவிட மருத்துவர்கள் ஆகியபணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசாணையால் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சத்தமில்லாமல் 317 மருத்துவர் பணியிடங்கள் மாயமாகியுள்ளன. ஆண்டுதோறும் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், எம்எஸ் மற்றும் எம்டி மருத்துவப் பட்டமேற்படிப்புகள் அதிகரிக்கப்படுகின்றன. நோயாளிகள் வருகையும் கூடியுள்ளது. ஆனால், பேராசிரியர், இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட மருத்துவர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்குத் தரமான கல்வியும், நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சையும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறும்போது, "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பெரும்பாலும் பேராசிரியர்கள் வகுப்பறை கல்வி மற்றும்நிர்வாகப் பணிகளை மட்டுமே பார்ப்பார்கள். இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்களே மாணவர்களுக்கான மருத்துவக் கல்வியுடன் நோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் சட்டம் சார்ந்த மருத்துவப் பணிகளையும் கவனிப்பார்கள்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தால் தற்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிக அளவு அறுவை சிகிச்சைகள், பிரசவங்கள் நடக்கின்றன. நோயாளிகள் வருகையும் அதிகரித்துள்ளது.

புதிய கொள்கைப்படி மதுரைக்கும் அருகில் உள்ள சிறியமாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் மருத்துவர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாவட்டங்களைவிட மதுரை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை பல மடங்கு அதிகம். நிறைய அறுவை சிகிச்சைகளும் நடக்கின்றன. எனவே, மாணவர் விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே அல்லாமல் நோயாளிகளின் வருகை யைப் பொறுத்தும் மருத்துவ பணியிடங்களை நிர்ணயிக்கவேண்டும். அல்லது அதிக நோயாளிகள் வரும் முக்கிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்’’ என்றனர்.

மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "மருத்துவர் பணியிடங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. ஓரிடத்தில் அதிகமாக இருந்த பணியிடங்கள் குறைக்கப்பட்டு தேவைப்படும் இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தப்புதிய அரசாணை நிரந்தரமில்லை. இதில், உள்ள குறைபாடுகளும் சரி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x