Last Updated : 24 May, 2019 10:35 AM

 

Published : 24 May 2019 10:35 AM
Last Updated : 24 May 2019 10:35 AM

கசக்கிப் பிழியும் பழச்சாறு விலை!

அக்னி நட்சத்திரம் கொளுத்துகிறது. பகல் நேரத்தில் வெயில் பாடாய்ப்படுத்துகிறது. தாகத்தால் தவிக்கும் மக்களோ, பழச்சாறு, இளநீர், கம்மங்கூழ் கடைகளை நாடிச் செல்கின்றனர். தேவை அதிகரித்துள்ளதை சாதகமாகப் பயன்படுத்தும் கடைக்காரர்கள், அதிக விலைக்கு பழச்சாறு விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகள் மற்றும் பழச்சாறு விற்பனை அங்காடிகள் உள்ளன. இவை தவிர, ஏராளமான இடங்களில் தள்ளுவண்டிகள், டீக்கடைகளிலும் பழச்சாறு விற்கப்படுகிறது.

உடுமலை மற்றும் சுற்றியுள்ள 300-க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து  பொதுமக்கள் தினமும் நகரப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவே கடும் வெயில் நிலவுகிறது. கடந்த சில நாட்களாக  பகல் நேரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால், அனல் காற்று வீசுகிறது. வெயிலின் தாக்கத்தை தணிக்க, சாலையோரத்தில் விற்கப்படும் இளநீர், நுங்கு, பதநீர், எலுமிச்சை சாறு, கரும்பு ஜூஸ் ஆகியவற்றை தேடிச் செல்கின்றனர். மேலும்,  பழமுதிர் நிலையங்கள், பழச்சாறு அங்காடிகளுக்குச் சென்று, ஆப்பிள், மாதுளை, முலாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களின் சாறை பருகி தாகம் தணிக்கின்றனர். பலர் பழங்களை வாங்கி, வீட்டிலேயே பழச்சாறு தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில், பல இடங்களில் போதிய சுகாதாரமின்றியும்,  கூடுதல் விலைக்கு பழச்சாறு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து உடுமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்  கூறும்போது, “பழச்சாறு தேவை அதிகரித்துள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள், தினமும் பழங்கள் மற்றும் பழச்சாறு விலையை உயர்த்தியும், அளவைக் குறைத்தும் வழங்கி வருகின்றனர். காரணம் கேட்டால், குறிப்பிட்ட பழங்கள் வரத்து குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், கேள்வி கேட்பவர்களை மிரட்டும் அல்லது விரட்டும் தொனியிலே பேசுகின்றனர். கடைக்கு  கடை விலையிலும், அளவிலும் வித்தியாசம் உள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்” என்றனர்.

உடுமலையைச் சேர்ந்த பழக்கடை உரிமையாளர்  கூறும்போது, “உடுமலை நகரில் உள்ளகடைகளில் தினமும் சுமார் 5 டன்வரை பழங்கள் விற்பனையாகின்றன. ஆப்பிள், ஆரஞ்சு போன்றவை பெங்களூருவில் இருந்து தருவிக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவில் இருந்து  மாதுளை, கம்பம், சின்னமனூரில் இருந்து பன்னீர்திராட்சை கொள்முதல் செய்யப்படுகிறது.

சிட்ரஸ் ஆப்பிள் கிலோ ரூ.120, நியூசிலாந்து ஆப்பிள் ரூ.200, பன்னீர் திராட்சை ரூ.75, சீட்லெஸ்திராட்சை ரூ.60, மாதுளை ரூ.175,கதளி, செவ்வாழை பழங்கள் ரூ.60 என்ற விலைகளில் விற்கப்படுகிறது. பழச்சாறு வகைகளில் மாதுளை ரூ.40 (200 மில்லி), ஆப்பிள் ரூ.40, சாத்துக்குடி ரூ.50 என்ற விலையில் விற்கப்படுகிறது” என்றார்.

எனினும், பல கடைகளில் இதைவிடக் கூடுதல் விலையில்தான் பழங்களும், பழச்சாறும் விற்கப்படுகிறது.

இது தொடர்பாக  உணவுப் பாதுகாப்பு அலுவலர் அம்ஜத்கான் கூறும்போது, “பொருட்களில் தரம் தொடர்பாக மட்டுமே எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியும். அளவு, விலை தொடர்பான புகார்கள் மீது, தொழிலாளர் நலத் துறையினர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும், கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, மக்கள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x