Last Updated : 12 May, 2019 12:00 AM

 

Published : 12 May 2019 12:00 AM
Last Updated : 12 May 2019 12:00 AM

10 ஆண்டுகளாக குழாயில் தண்ணீர் வராததால் குடிநீருக்காக 4 கி.மீ பயணிக்கும் கிராம மக்கள்: பலமுறை மனு அளித்தும் பல்வேறு போராட்டம் நடத்தியும் பயனில்லை

தஞ்சாவூர் அருகே குடிநீர் தட்டுபாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் கொண்டு வர பெண்களும், ஆண்களும் 4 கி.மீ., தொலைவுக்கு நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால், புதுக்குடி, ராயமுண்டான்பட்டி, புதுத்தெரு, முத்துடையான்பட்டி என 10-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் நிலவி வருகிறது.

அத்துடன் ஊராட்சியால் வழங்கப்படும் தண்ணீரும் குடிக்க முடியாத நிலையில் உப்பு தன்மை அதிகளவில் கலந்தும் காணப்படுகிறது.

இந்நிலையில், ராயமுண்டான் பட்டி அருகேயுள்ள புதுத்தெரு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு புங்கனூர் கிராமத்திலிருந்து காவிரி குடிநீர் குழாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதில், சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. அதன் பிறகு காவிரி தண்ணீர் வரவில்லை. இதனால், குடிநீருக்கு அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தற்போது அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், புதுத்தெரு மக்கள் குடிநீர் கொண்டு வர 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோழகம்பட்டி அல்லது 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சி மாவட்டம் திருநெடுங்குளத்துக்கும் செல்ல வேண்டி உள்ளது. இப்பகுதிகளுக்கு ஆண்கள் இருசக்கர வாகனங்களில் சென்று குடங்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர், இப்பகுதி பெண்கள் ராயமுண்டாம்பட்டிக்கு 2 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து புதுத்தெரு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் கூறியது: எங்கள் பகுதி மேடானது. இப்பகுதியில் காவிரி குடிநீர் குழாய் பெயரளவில் மேலோட்டமாக பதிக்கப்பட்டுள்ளன. இதனால், காவிரி நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டு, பல ஆண்டுகளாக குழாயில் தண்ணீர் வருவதில்லை.

நாங்கள் நாள்தோறும் காலை 7 மணிக்கு மோட்டார் சைக்கிளில் அல்லது சைக்கிளில் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநெடுங்குளம் அல்லது அதன் அருகில் உள்ள சோழகம்பட்டிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம். தண்ணீர் எடுத்து வந்த பிறகே வேலைக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. இதனால், நாங்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம் என்றார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலுார் ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் கூறியது: இந்த பகுதிகளில் உள்ள பல கிராமங்களிலும் இதேநிலை தான். குடிநீருக்காக பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்தோம். பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். எனினும், எங்கள் பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வர இதுவரை எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. மேலும் இப்பகுதியில் ஊராட்சி குழாயில் வரும் தண்ணீரில் உப்பு தன்மை அதிகம் இருப்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றார்.

இதுகுறித்து கிராம பெண்கள் கூறும்போது, "எங்கள் பகுதியில் 2 கிணறுகள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதில் குடிக்க தண்ணீர் எடுத்துள்ளோம். நாளடைவில் பராமரிப்பு இல்லாததாலும், மழை இல்லாததாலும் அந்த கிணறுகள் வீணாகி விட்டன. இப்போது, 2 கிலோ மீட்டர் முதல் 4 கிலோ மீட்டர் வரை சென்று தண்ணீரை குடங்களில் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். எங்கள் கிராமம் தனி தீவு போல இருப்பதால், அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து எங்கள் பிரச்சினைகளை கேட்டதே இல்லை" என்றனர்.

இதுகுறித்து பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டபோது, "புதுத்தெரு பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து 10 நாட்களுக்கு முன்பு மனு வந்தது. இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளோம். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மக்களவைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்பு இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x