Published : 23 May 2019 07:59 PM
Last Updated : 23 May 2019 07:59 PM
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மாறிப்போன மின்னணு இயந்திரத்தால் போராட்டம் நடந்து இறுதியில் திமுக வென்றதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு ஓராண்டு தண்டனை விதித்து புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த அக்.30-ம் தேதி தீர்ப்பு அளித்தது.
அதையடுத்து, அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இத்தொகுதி காலியாக இருப்பதாக கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுடன், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலும் நடந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சி நிறுவனர் ரங்கசாமி தனது அண்ணன் மகன் நெடுஞ்செழியனை நிறுத்தினார். திமுக தரப்பு தொழிலதிபர் வெங்கடேசனை நிறுத்தியது. மொத்தம் 8 பேர் களத்தில் இருந்தனர்.
முதல் சுற்றில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் திமுக வேட்பாளரை விட 144 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் 9241 வாக்குகளும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் 8,253 வாக்குகளும் பெற்று மீண்டும் திமுக வேட்பாளர் 1,088 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இரண்டாவது சுற்றின் போது புதுப்பேட்டையில் பதிவான வாக்குச்சாவடி மையத்தின் மக்களவை மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்னும் மையத்திற்கு மாறியிருந்தால் அதனை எண்ணாமல் நிறுத்திவிட்டு தேர்தல் அதிகாரிகள் மூன்றாவது சுற்று எண்ணிக்கைக்குச் சென்றனர்.
மூன்றாவது சுற்று எண்ணிக்கையின் போது என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் 9,031 திமுக வேட்பாளர் வெங்கடேசன் 10,498 வாக்களைப் பெற்று மீண்டும் 1,461 வாக்குகள் முன்னிலைக்குச் சென்றதால் உடனே என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஏன் 19-வது வாக்குச்சாவடி மையத்தின் வாக்குகளை எண்ணாமல் மூன்றாவது சுற்றிற்குச் சென்றீர்கள் என கேள்வி எழுப்பி, அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் வாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் மாற்றி வைக்கப்பட்ட இயந்திரம் எடுத்து வரப்பட்டு எண்ணப்பட்டது.
இறுதியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெங்கடேசன், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை விட 1,539 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
3-ம் இடத்தைப் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுரி 1,084 வாக்குகளும், 4-ம் இடத்தைப் பிடித்த நோட்டா 653 வாக்குகளும் பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT