Published : 30 May 2019 08:29 PM
Last Updated : 30 May 2019 08:29 PM
இளைஞரணி செயலாளர் பொறுப்புக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தால் வளர்ச்சி வேகமாக இருக்கும். அரசியல் களத்தில் இளைஞர்களை, பெண்களை ஈர்ப்பதில் ரஜினி, கமல், சீமானை விட உதயநிதி அதிக ஆற்றல் கொண்டவர் என மதுரை திமுக நிர்வாகி ஆர்.பி.பாலாஜி தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆர்.பி.பாலாஜியிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணியில் பொறுப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறதே?
அனைவரும் வலியுறுத்துகிறோம். தலைமைப் பதவி வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தலைவர் மகன் என்பதால் வலியுறுத்துகிறீர்களா?
அப்படி இல்லை. பொதுத்தேர்தலில் அவரது பிரச்சாரம் சிறப்பாக எடுபட்டது. தாய்மார்களைக் கவர்வது போன்று ஒரு தலைவர் சமீபகாலமாக இல்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சாதாரணமாக நேரடியாக பொதுமக்களிடம் நல்லா இருக்கீங்களா? என்னை யாருன்னு தெரியுதா? என்று சமுதாய நடையில் பேசியபோது பொதுமக்கள் ஆர்வமாக வெளியில் வந்து கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அவர் நடிகர். பிரபலமானவர் என்பதால் கூட்டம் வரும், ரசிப்பார்கள். அதை வைத்து தலைமை வேண்டும் என்று எப்படி சொல்லமுடியும்?
பிரச்சாரத்துக்கு வரும்போது கட்சிக்காரர்கள் மத்தியிலும் அவரது அணுகுமுறை எளிமையாக, சிறப்பாக உள்ளது.
கட்சிக்காரர்களிடம் அணுகுமுறை என்றால் கட்சிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறாரா?
இல்லை. பந்தா இல்லாமல் எளிமையாக வருவது. பொதுவாக தலைவர் குடும்பம் என்றால் எளிதில் நெருங்க முடியாது என்பார்கள். ஆனால் இவர் சாதாரணமாக கட்சிக்காரர்களிடம் பழகுவது, ஒப்புக்காக இல்லாமல் உணர்வுப்பூர்வமாக விசாரிப்பது என்று இயல்பாகப் பேசுவதைப் பார்த்திருக்கிறோம். எல்லோருமே இதைப் பற்றித்தான் சொல்கிறார்கள். அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
தலைவர் கட்சிக்குப் போன பிறகு இவர்தான் அந்த இடத்தை நிரப்புவார் என்று நினைக்கிறோம்.
வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு நிர்வாகிகள் ஒத்துழைப்பு இல்லை என்ற கருத்து நிலவுகிறதே?
அப்படி இல்லை. இளைஞரணி சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவர் சார்ந்த விஷயங்கள் போய்க்கொண்டுதான் உள்ளன. உதயநிதி வரும்போது வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு அடுத்தகட்ட முன்னேற்றம் வரும்.
எளிமை, எளிதில் அணுகும் பண்பு ஆகியவை கட்சி நிர்வாகத்துக்குள் கொண்டுவரத் தகுதியான ஒன்றா?
இந்தக் காலத்து அரசியலில் பந்தா இல்லாமல் எளிதில் அணுகக்கூடிய தலைவரைத்தான் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். பந்தாவாக இருப்பது, பக்கத்தில் யாரையும் அணுகவிடாமல் இருப்பதை யாரும் தற்போதைய காலகட்டத்தில் விரும்புவதில்லை. உதயநிதியின் பண்பு இப்போதைய காலகட்டத்துக்கு அவசியம் தேவை என்று நினைக்கிறோம்.
எப்படிச் சொல்கிறீர்கள்?
அதில் பரிசோதனை முயற்சியாக தற்போது நடந்த 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்கூட ஒரு நாளைக்கு 18 கூட்டங்களில் பேசினார். காலையில் ஆரம்பித்து மாலை வரை மதியம் உணவு இடைவேளை தவிர எங்களுடனேயே இருந்தார். அவருடைய பேச்சு, அணுகுமுறை மக்களை மிகவும் கவர்ந்ததை நேரில் பார்த்தோம்.
கமல், ரஜினி, சீமான் உள்ளிட்டோர் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் இளைஞரணியின் வளர்ச்சியில் உதயநிதியின் பங்கு எப்படி இருக்கும்?
நீங்கள் சொல்லும் நடிகர்கள் வரிசையில் அதிகமான இளைஞர்கள் பின்பற்றுவது கண்டிப்பாக உதயநிதி ஸ்டாலின் என்பதை நீங்கள்கூட மறுக்கமாட்டீர்கள். இளைஞர்கள் என்கிற சாய்ஸ்க்கு இவர்தான் சரியான நபர்.
திமுகவில் ஸ்டாலின் பொறுப்புக்கு வர நீண்ட காலம் ஆனது. ஆனால் உதயநிதி குறுகிய காலத்தில் வந்துள்ளார் என்கிற கருத்து உள்ளதே?
அதிமுகவில் உடனடியாக மேலே வருவார்கள். உடனே காணாமல் போய் விடுவார்கள். ஆனால் திமுகவில் கஷ்டப்பட்டுதான் ஒரு இடத்திற்கு வர முடியும். ஆனால் நீண்ட நாட்களாக இருப்பார்கள். ஒரு பெரிய பொறுப்புக்கு வரும்போது நீண்ட காலமாகும். ஆனால், இளைஞர் அணியில் அதை உடனடியாக முடிவெடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
இதற்கு முன்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். அவர் முழுமையாக தனது பணியை நிறைவு செய்தார். அதேபோன்று உதயநிதி தலைமைப் பொறுப்புக்கு வரும்போது இருவர் தலைமையில் வேகமான வளர்ச்சி இருக்கும்”.
இவ்வாறு ஆர்.பி.பாலாஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT